தமிழா உயிர்த்தெழுக!
(அறுசீர் விருத்தம்)
தமிழா! என்றன் அன்புயிரே
.....தமிழின் வித்தே உயிர்த்தெழுக!
தமிழர் தஞ்சீர் அறியாமல்
.....தாழ்ந்து வாழ்தல் முடிந்ததுவாம்!
தமிழே ஞால முதன்மொழியாம்
.....தமிழே தாயாம் மொழிக்கெல்லாம்
தமிழர் புவிமுன் மாந்தரெனத்
.....தகவாய் உரைத்தார் பாவாணர்.
என்றுந் தமிழர் ஆசானாய்
.....இனிதே திகழும் பாவாணர்
நன்றாம் அகவை பதினேழில்
.....நன்றே உணர்த்தும் ஆசிரியர்
என்றே வியக்கப் பணிதொடங்கி
.....என்றும் குன்றின் விளக்கானார்!
இன்றும் அவரே பேராசான்
.....இணையின் தமிழின் மீட்பருமே!
அரிமா விஞ்சும் வீறுற்ற
.....ஆற்றல் உளப்பா வலரேறின்
அரிய இதழாம் தென்மொழியின்
.....அருஞ்சிறப் பாசி ரியரானார்!
உரிமைத் தமிழர் சீர்மீட்க
.....உலகத் தமிழர் கழகத்தைப்
பெருமை யோடு நன்கமைத்தார்
.....பீடில் தமிழர் உணர்ந்திலரே!
மொழிகள் அனைத்தின் சொற்களெல்லாம்
.....முகிழ்ந்த வகையை ஆய்ந்துரைத்தார்!
விழியாம் தமிழே பன்மொழிக்கும்
.....வேர்ச்சொல் ஆய்வே சான்றாகும்!
மொழிஞா யிறுதான் பாவாணர்!
.....முன்னம் இவருக் கிணையில்லை!
மொழிந்தார் சிறப்பாய் மறைமலையார்
.....முதல்தாய் ஈன்ற மகனவரே!
தமிழாம் உயிரை வளர்த்தளித்த
.....தகைசால் மதுரை யில்நடந்த
தமிழின் ஐந்தாம் உலகரங்கில்
.....தனித்தே அரிபோல் ஆர்த்தெழுந்து
"தமிழின் மரபு மாந்தயினத்
.....தோற்றம்" குறித்துப் போர்முரசாய்
தமிழின் தமிழர் வரலாற்றை
.....தமிழர்க் கறைந்தார் பாவாணர்!
வேங்கை உளத்தின் தமிழ்ப்பேச்சு
.....வெந்தணல் போலச் சூடேற்ற
ஆங்கே மனஞ்சோர்ந் தவைதுடிக்க
.....அமைதி யானார் தமிழ்வேந்தர்!
ஏங்கித் தமிழ்த்தாய் அழலானாள்!
.....எந்த மருந்தும் பயனின்றி
வீங்கு மாண்பின் தமிழ்த்தாயின்
.....மெய்யோ டுயிராய் இணைந்திட்டார்!
அச்செடுக்க
பொறிஞர் மி. அமலன்
திருச்சிராப்பள்ளி - 620021
|