தனிப் பாடல்

இணையத்தமிழ் இலக்கியம்


வோலைச் சுவடியி லொன்றிநீ வாழ்ந்தும் உயர்ந்திருந்தாய்;
தாளி லழுத்துமோ ரச்சுநூல் தன்னில் தவழ்ந்திருந்தாய்
நாளுறப் பின்னரோர் மின்னச்சு நூலானாய், நாட்டிலின்று
காலூன் றிணைய தளத்துளும் வந்தாய்க் கனித்தமிழே!

கறையா னரிக்கக் கடல்வந்து கொள்ளக் கருமனத்தார்
மறைவாகத் தீயில் மடுத்துக் கொளுத்த வளமிழந்தாய்!
குறையாது நிற்க இணையமே காப்பெனுங் கொள்கையுடன்
உறைய நுழைந்தா யுணர்ந்தேன் தமிழேஉன் உள்ளத்தையே!

மின்னிதழ் தன்னில் மிளிரு மிலக்கிய மென்றமிழே!
எண்ணிய போதில் எதிர்வந்து தோன்று மிளந்தமிழே!
பன்னெடும் நாடுகள் பார்த்திடத் தோன்றும் பசுந்தமிழே!
உன்னுடை மேன்மையை உள்ளியென் னுள்ளம் உவக்கிறதே!

புதுவை இணையத் தமிழாம் இலக்கியப் பொன்னிதழே!
உதவுங் கருத்துக ளோர்ந்து திரட்டி உலகவர்முன்
இதமுறத் தந்தே இணையப் படிப்பாள ரின்பமுற
புதுமைகள் செய்து புகழ்பல கொண்டு பொலிகுவையே!



புலவர் அரங்க. நடராசன்
புதுச்சேரி