ஆனந்தக் களிப்பு மெட்டு

வளங்கள் கூத்தாடும்!


எடுப்பு

வானத்தைப் பாரடி பெண்ணே - அங்கு
காணக் கருமேகம் சூழ்ந்தது பெண்ணே! (வா)

முடிப்பு

தானஞ்செய் கின்றவர் போலே - மழை
தன்னைக் குளிரத் தருமோ மண்மேலே!
மானைப் பழித்த கண்ணாளே! - மழை
வந்து பொழிந்தால் எதுவேண்டும் மேலே! (வா>

ஏரி குளங் கிணறெங்கும் - தண்ணீர்
இல்லை என்ற சொல்லும் ஊரினில் மங்கும்;
மாரிநீர் ஆறுகள் எங்கும் - வந்தால்
மண்டும் பயிர்கள் வயல்களில் பொங்கும்

பாழும் பசித்தொல்லை ஓடும் - பசும்
பால்வளம், பண்டம், பழவகை கூடும்;
போழும் வறுமையில் வாடும் ஏழை
பூரித்து வாழ வளங்கள் கூத்தாடும்! (வா)புலவர் அரங்க. நடராசன்
புதுச்சேரி