கும்மிப் பாடல்

சிறைக்குள்ளே வீசவேண்டும்!


வட்டநி லாவின்வெ ளிச்சத்தி லேநாங்கள்
வட்டமிட் டுக்கும்மி கொட்டுகின் றோம்
கட்டுங்க ருங்குழல் கன்னிய ரேநீங்கள்
கலந்து கும்மிய டியுங்க ளேன்...

கட்டிக்கொள் லப்பணம் கேட்டுநிற் கும்பொல்லாக்
காலிப்ப யல்களைக் காரித்துப் பி...
விட்டுவி டாமற்பி டித்துச்சி றைக்குள்ளே
வீசவேண் டும்என்று கும்மிய டி...

ஆணும்பெண் ணுஞ்சமம் என்றுசொல் வாரிந்த
ஆளுந்து றையினில் உள்ளவர் கள்...
ஆண்களைப் போலவே வேலையி டங்களில்
அய்ம்பதை ஏன்தர எண்ணவில் லை!

பத்தினிப் பெண்டாட்டி வேண்டுமென் பாராண்கள்
பாழான வேசியோ டாடிடு வார்...
ஒத்துடன் வாழ்ந்திடும் இல்லத்த ரசிக்கும்
ஒவ்வாத நோய்களை உண்டுசெய் வார்...

சோறுச மைத்துத்து ணிதுவைத் துப்பிள்ளை
சொல்லும்பா டங்களைச் சொல்லித்தந் தும்...
மாறுப டாதுக ணவரைக் காத்திடும்
மாண்பினள் பெண்ணென்று கும்மிய டி...

பெண்கள்து ணையில்லை என்றுசொன் னாலிந்தப்
பேராண்மை காட்டிடும் ஆண்கள்க தை...
மண்கலத் தைக்கல்லில் போட்டக தையாக
மாறிவி டுமென்று கும்மிய டி...



புலவர் அரங்க. நடராசன்
புதுச்சேரி