பாரதியின் நாட்டுப் பற்று

(பன்னிருசீர் சந்த விருத்தம்)


பண்டைநாட் புலவரைப் போலன்றி எளிமையாய்ப்
.....பாடல்பு னைந்த புலவன்
..........பாடியதை யேமீண்டு பாடாது புதியவாய்ப்
...............பாடிக்கொ டுத்தகவிஞன்
சண்டையொன் றில்லாத விடுதலைக் காகவே
.....தன்னையே தந்துவாழ்ந்த
..........தாய்மனக் காந்தியின் வாய்மொழியை வேதமாய்த்
...............தாங்கிநடை கொண்டமறவன்
தண்டமிழ்ப் புலவரில் கம்பனைப் போலவும்
.....தனிவள்ளு வன்போலவும்
..........தரணிவேந் தன்மகனி ளங்கோவைப் போலவும்
...............சாற்றவே றில்லையென்பான்
மண்டுமாங் கிலராட்சி ஒண்டாது நீக்கவே
.....வலிவான புயலானவன்
..........மணியான தாயகப் பற்றோடு வாழ்ந்துள்ள
...............பாரதியெ னும்புலவனே

செந்தமிழ் நாடென்று சொன்னதும் காதிலே
.....தேன்பாய்வ தாய்க்கூ றுவான்
..........சீருற்ற பண்பாடு வேர்விட்ட நாடென்று
...............செம்மாந்து பாடிவருவான்
நந்தாத காவேரி தென்பெண்ணை பாய்கின்ற
.....நாடெங்கள் நாடுமென்பான்
..........நலியாவ ளங்களும் பலவாய்நி றைந்ததும்
...............நந்தமிழ் நாடதென்பான்
தந்தையும் தாயரும் முந்தையோர் யாவரும்
.....சலியாது வாழ்ந்துவந்த
..........தமிழ்வாழு நாட்டையே அமிழ்தான நாடென்று
...............தலைமேலு யர்த்திமகிழ்வான்
நிந்தையொன் றில்லாத வீரத்தி னாலேநி
.....மிர்ந்தநா டென்றுசொல்வான்
..........நிகரிலாப் பாரதியும் அயர்விலாப் பற்றாள
...............னென்பதில் தவறில்லையே

அடிமையாய் வாழ்வதும் மேன்மையோ? அதனைவிட
.....அழிவதே நல்லதென்றான்
..........அறிவினால், கல்வியால், ஆன்றபல பொருளினால்
...............அளவற்றி ருந்தபோதும்
விடிவிலா அடிமையென வாழ்பவர்க் கவைதரும்
.....மேன்மையொன் றில்லையென்றான்
..........மேவுமுயி ரில்லாப் பிணத்துக்கு நகையணியும்
...............வேலையாம் அதுவுமென்றான்
வடுவிலா விடுதலையை வாங்காத நாட்டிலே
.....வளராது கல்வியென்றான்
..........வளமான கலைகளும் நிலையான நூல்களும்
...............வாழாது வீழுமென்றான்
கொடுமையே இல்லாத குடியாட்சி கொள்வதே
.....கொள்கையாய்க் கொண்டவீரன்
..........குறையாத பற்றுடன் நாட்டைநி னைத்தவன்
...............பாரதியெ னுங்கவிஞனே

மாண்பான நாடாக நம்நாடு மாறவும்
.....வழிகளைச் சொல்லிவைத்தான்
..........வகைகொண்ட தொழிலெலாம் தொகைகொண்டு செய்வபோல்
...............வளருமிந் நாடுமென்றான்
ஊன்கொண்ட உயிரினைக் காக்கின்ற உழவொன்றை
.....ங்கிடச் செய்கவென்றான்
..........ஒருநாளு மோயாது வியர்வையால் இந்நாட்டை
...............உருவாக்க வேண்டுமென்றான்
தேன்கொண்ட நூலெலாம் வான்புகழ் கொண்டதாய்ச்
.....செய்யுங்க ளென்றுரைத்தான்
..........தெளிவான பிறநாட்டு நூல்களைத் தமிழிலே
...............செப்பமாய்த் தருகவென்றான்
தான்கொண்ட கவிதையால் தன்னாடு முயரவே
.....தளராது தொண்டுசெய்தான்
..........தங்கமன பாரதியின் பற்றெலாம் நாட்டையே
...............தாங்கியதை உணரலாமே

பாரதத் தாயென்று நாட்டையே புகழுவான்
.....பழகுமொழி பதினொட்டையும்
..........பாரதத் தாய்பேசு மொழியென்று மகிழுவான்
...............பாசத்தி னாலுருகுவான்
சீர்நின்ற வரலாறு செப்புபல வல்லரின்
.....சிந்தைக்கு மெட்டாதவள்
..........சீரிளங் கன்னிபோல் பாரதத் தாயவள்
...............தெரிகிறா ளென்றுபுகல்வான்
ர்கின்ற வேதமும் நாவினில் கொண்டுள்ள
.....உயர்வினாள் என்றுரைப்பான்
..........ஒப்பற்ற யோகமும் போகமும் உடையளென
...............ஒளியாது சொல்லிவருவான்
பேர்கொண்ட தாயகப் பற்றோடு வாழ்ந்தவன்
.....பிறிதொன்றை நினையாதவன்
..........பெரியபுக ழொடுநெடிய கவிஞனென உலவியவன்
...............பாரதியெ னும்புலவனேபுலவர் அரங்க. நடராசன்
புதுச்சேரி