வரலாறு படைப்போம்
புதுக் கவிதை
பெண்ணே....,
அரிதரிது மானிடராய்ப் பிறத்த லரிது!
அப்படி இருந்தும் கலக்கமேன்?
ஓ! மங்கையராய் பிறந்து விட்டதாலா?
தவறு பெண்ணே! தவறு -
சிலிர்த் தெழுந்து
சீறிப்பாய வேண்டிய நீ;
முக்கல் முனகலுடன்
மூலையில் முடங்கிக் கிடப்பதோ!
வேதனைகள் மட்டுமே
வேடிக்கை பார்க்காதே!
சாதனைகளையும் சற்று
எட்டிப்பார் எழுந்து!
உயர்நீதி மன்றத்தில் நீதிக்கு
உயிர் கொடுத்த அன்னா சாண்டி;
எவரெசுட் உச்சியினை
ஏறிப்பிடித்த பச்சேந்திரிப் பால்;
உலகம் வியந்திடவே விண்வெளியில் பறந்த;
கல்பனா சாவ்லா!
கவிக்குயிலாய், ஆளுனராய் சரோஜினி நாயுடு;
நகரத் தலைவராய் தாரா செரியன்;
வாகனமோட்டிய வசந்தகுமாரி;
புகைவண்டிப் புயலாய் சுரேகா சங்கர் யாதவ்;
இத்தனைக்கு மேல் இரும்பு மங்கை;
கர்ணம் மல்லேசுவரி!
இவர்களும் பெண்களே!
சாதனைப் பெண்கள் அனைவரும்
உனக்கொரு அறிமுகந்தான்
இலக்கடைய வழிகாட்டிகள்தான்!
இவர்களுக்குப் பின்னே
எத்தனை யெத்தனையோ
சாதனைப் பெண்கள்
உன்னைப் பெருமைப் படுத்த;
எத்தனையோ வெகுமதிகள்
காத்திருக்கும் போது
அடுக்களையில் வெறும் பெண்மணியாய்
மண்கலங்களை ஆண்டுகொண்டிருக்கிறாய்
உன்கையில் இருக்க வேண்டியது
உலோகமல்ல - உலகமென்பதை புரிந்து கொள்!
புரட்சிப் பெண்ணே!
சாதனைகளை சரித்திரத்தில் ஏற்றிட
வேதனைகளை வெளியில் வீசிடு!
பொறுத்தது போதும்; புயலெனப் புறப்படு!
மங்கையர் என்றாலே மங்களமென்னும்
புதிய வரலாறு படைப்போம்!
பாவலர் செல்வி எஸ். அருணா
புதுச்சேரி
|