தனிப் பாடல்

கனவு


பகல் கனவு பலிக்காதே! அதிகாலை பலிக்குமே
மூடநம்பிக்கையின் முகவரி....

கனவு காண்! இலட்சியம் ஈடேறவே
குடியரசுத் தலைவரின் பிரச்சாரம்
இளைய தலைமுறையினரின் தன்னம்பிக்கைக்கு...

பாரதியின் கனவு சுதந்திர இந்தியா;
சுதந்திர இந்தியாவின் மறுபக்கம் அவலமோ?

படைப்பாளியின் கனவு பகுத்தறிவை பரப்பிடவே,
அறிவியலாரின் கனவு அடுத்தத் தலைமுறைக்கு...
அரசியல்வாதியின் கனவு பதவி வெறிக்கோ?
ஏழையின் கனவோ அடுத்த வேளை கூழுக்கோ?

நீதிமன்றம் நக்கீரனாய்த் தீர்ப்பளித்திட
அரசாங்கத்தின் வரிப்பணத்தை சேமித்திட,
சாதிமத வெறிக்கு தீயிட்டு கொளுத்திட,
ஊடகங்கள் விழிப்புணர்வுக்கு வழிகாட்ட,

அரசியல் ஊழலற்ற ஆட்சிக்கு அறநெறிகாட்ட,
அகவாழ்வு ஒற்றுமையுடனே ஓங்கிட,
வணிகத்திலே கலப்படமில்லா பேரம் மலிந்திட,
காதலால் சமதர்ம சமுதாயம் மேம்பட,

கங்கையும் காவிரியும் இணைந்திட,
சுற்றுப்புறச் சூழல் மாசாகாமல் காத்திட,
சேரிக்குள் தீண்டாமை மறைந்திட,
பொதுவுடமைப் பூங்கா மலர்ந்திட,

போர்வெறி, தீவிரவாதம் தணிந்திட,
வறுமைக்கோடு அடியோடு அழிந்திட,
வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்திட
அயல்நாட்டுக் கடன்கள், வட்டிகள் தீர்ந்திட,

உலகமே அமைதிப் பூங்காவாய்......
என் கனவுகள்!



பாவலர் பைரவி,
புதுச்சேரி