கன்னித் தமிழுக்கொரு கல்வெட்டு
புதுக் கவிதை
உடல் மண்ணுக்கு... உயிர் தமிழுக்கு
உணர்வு படைப்புக்கு... வாழ்வோ மனிதநேயத்திற்கு
செம்மொழி தமிழுக்கே தானளித்த அறிவுச்சுடர்!
மழலையின் குணம்... எளிமையின் உரு
நேர்கொண்ட பார்வை... வீறுநடைப் பயணம்
நேர்மையின் உறைவிடம்... இறக்கும்வரை படைப்பாளி
பன்மொழி கற்ற வித்தகர்... மொழியாளுமையில் நிறைகுடம்
ஆசிரியர் தொழிலுக்கு முதல் மரியாதை
பட்டங்கள் பலகண்டும் செறுக்கில்லா படிப்பாளி
படிப்பால் ஆழஉழுதிட்ட அயர்வில்லா விவசாயி
உண்மை வாழ்க்கை வரலாறு காட்டியக் கண்ணாடி
தமிழில் அகரமுதலி படைத்தவனே!
பைந்தமிழின் மேன்மைக்கொரு மகுடமே!
உலகத் தமிழ் கழகத்தின் முதல்மகனே!
வானம்வரை நெடித் துயர்ந்த எழுத்தாணியே;
உன்பெயரில் நூலகம் சென்னைக் கணிகலனே!
தமிழ்க்கடலில் முத்தெடுத்த தேவநேயனே!
மார டைப்பால் உன்மரணம் உனக்குள் தமிழின் எதிரியா?
சாகா அருளாய் உன்னூல்கள் உனக்கே தமிழின் பரிசா?
கன்னித் தமிழுக்கே நீயென்று மொரு கல்வெட்டா!
பாவலர் பைரவி,
புதுச்சேரி
|