புதுவை அரசு

புதுச்சேரி
நாள்: இருபத்துமூன்று - டிசம்பர் - 2004

ந. ரங்கசாமி
முதலமைச்சர்


வாழ்த்துரை

          புதுவையில் தூய தமிழில் இலக்கிய இணைய தளமொன்றினை, அதுவும் *புதுச்சேரி* எனும் பெயரிலேயே இணைய இலக்கியத் திங்களிதழாகவும் தொடங்க இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செயல்.

          இந்த இணைய இதழில் தமிழிலக்கிய வளர்ச்சிக்காக, குறிப்பாக இளைய சமுதாயத்தினரின் தற்போதைய ஆர்வமான கணினி, இணைய-உலா இவைகளைக் கருத்திற்கொண்டு, ஆண்டுதோறும் மரபிலக்கியப் போட்டிகளை இணையத்திலேயே நடத்தி பரிசில்கள் அளிக்கவிருப்பதும், மாணவ மாணவிகளிடையே மரபுப் கவிதை எழுதும் ஆர்வத்தினை தூண்டுமென்பதில் எள்ளளவேனும் சந்தேகமில்லை. தளத்திலேயே தமிழிலக்கண விவரங்களை இணைய பக்கங்களாக வைத்திருப்பதும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

          புதுச்சேரி அரசு பொன்விழா கொண்டாடும் இத்தருணம் இத்தகைய தமிழார்வ முயற்சி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது. இணையதளம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள மக்கள் மட்டுமன்றி, பன்னாட்டிலும் பார்க்கக் கூடிய ஊடகம் என்பதால், புதுவையிலுள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் உலகெங்கும் உள்ள தமிழினத்தவரை சென்றடைய உதவும் வகையிலான இந்த இணையதள முயற்சிக்கு எனது அன்பு வாழ்த்துக்கள்.

          தரமிக்க தமிழிலக்கிய படைப்புகளை புதுவை எழுத்தாளர்களும், பாவலர்களும், இவ்விணைய இதழ் வழியாக உலகெங்கும் பரவும்படி படைத்துப் புகழ் பெறுகவென வாழ்த்துகிறேன்.
ஒப்பம்
ந. ரங்கசாமி