தலைமைப் பா
தமிழ் வாழ்த்து
அன்னைத் தமிழே! அறம் வளர்க்கும் நின்னடியை
முன்னே வணங்குகிறேன்! முப்போதுங் காத்தருள்க!
அவை வணக்கம்
நாவேந்தும் சொல்லின் நலமேந்திச் செந்தமிழின்
பாவேந்தி வாழ்த்தநம் பாவேந்தர் மண்ணில்
நிறைவாய்ப் பணியாற்றும் நீடுதமிழ் வல்லார்!
இறைவிழியர் ஐயாவெடுத்த முயற்சியினால்
நற்றமிழ்ப் பாவலர்கள் நாடும் உணர்வுடனே
சொற்றமி(ழ்) ஆய்ந்த சுடர்க்கதிரோன் பாவாணர்!
நூற்றாண்டு நன்னிகழ்வை நுட்பமாய்க் கொண்டாடும்
ஆற்றல் புலவீர்! அனைவர்க்கும் என்வணக்கம்.
கொஞ்சுந் தமிழ்கேட்கக் கூடியுள்ள சான்றோர்க்கும்
செஞ்சொல் வணக்கம். சிறப்பாய்த் தருகிறேன்!
பாவாணர்
ஆரியத்தால், ஆங்கிலத்தால் ஆர்த்த மடமையெலாம்
சீரியசொல் லாய்வால் சிதறித்த வல்லரிமா!
வண்டமிழர் மீதும், வரலாற்றின் மீதுமிங்கே
மண்டுவிருள் போக்கியே மாண்புடைபா வாணர்
தனித்தமிழ்க் கொள்கைகட்கே தக்க அடை யாளம்
இனித்திடக் காட்டிவைத்த எந்தல்நம் பாவாணர்!
நாவால், எழுத்தால் நயமாய்ச் செழுந்தமிழை
ஓவாமல் நம்பேண ஓர்ருறுதி பூண்டிடுவோம்!
ஆவலுறு பாவலர்கள்! அன்பின் நெறிப்படியே,
பாவாணர் சீர்பாட பாவலன் யான்வேண்டுகிறேன்!
அச்செடுக்க
திருக்குறள் புலவர் நாவை சிவம்
|