பாவாணரின் தமிழர் மதம்


மண்கெழு ஞாலம் மலரும் முன்னர்ப்
பண்கெழு வுலகைப் பாரோ(ர்) அறிய
கல்தோன் றிமண்தோன் றாக்கா லத்தே
வல்வினை வாளொடு முந்தோன் றியமுதல்.

மூத்த குடிசெந் தமிழினக் குடியாய்
பூத்த இலமுரிய பெருங்கண் டத்தில்
நாவலந் தீவாய் நாற்பத் தொன்பது
காவ லுடைய கழிப்பெரு நாடாய்

விளங்கிய தென்குமரி விழக்கடற் கோளால்
நலங்கெடச் சிதறிய நாட்டின் பரப்புக்
குறைவுற இன்றைய குமரித் தெற்கிலும்
நிறைவரை வேங்கடம் வடக்கி லாகி

அலைகடல் கிழக்கு மேற்கிலும் அரணாய்
நிலைபெற் றிலங்கிடும் நெடுந்தமிழ் நாட்டின்
மறவினை மண்ணாம் திருநெல் வேலித்
திறமுடை ஊரில் தேவ நேயர்

ஞான முத்து - பரிபூ ரணம்மாள்
இணையர் ஈன்ற ஈடிலா மகனாய்
எளிய இல்லில் பத்தாய்த் தோன்றி
வலிய நெஞ்சுடன் வாழ்நா ளெல்லாம்

சிறப்புடன் தாய்மொழி விருப்புடன் கற்றுப்
பிறழ்த லில்லாப் பேணிய கொள்கையில்
செந்தமிழ்ச் சொல்லின் பிறப்பியல் ஆய்ந்த
முந்தை மொழியின் முதுபே ரறிஞர்

சொல்லின் வேர்களைச் சுவைகுன் றாமல்
ஒல்லும் வகையில் உணர்த்திய ஞாயிறு
தனித்தமிழ் வேந்தர், தமிழரின் மதத்தை
முனியா தெவரும் முற்றிலு மேற்க

வியத்தகு முறையில் விளங்க வைத்தார்
நயமுடன் மதத்தை நமக்கறி வுறுத்தி
ஆரியர் மதத்துடன் தமிழர் மதத்தைக்
காரிகைக் காட்டிக் கலவை யாக்கி

இந்து மதமென ஏற்றிட வைத்ததை
சிந்தை தெளிந்திடச் சீருடன் ஆய்ந்து
சிறுதெய்வ வழிபா டாரியர்க் குரிய
பெருந்தேவ வழிபா டென்பதே தென்மதம்

தீயின் கூறு சிவனிய மதமாய்
நீரின் கூறு திருமால் மதமாய்
சேயோன் வழிபடல் சிவமத மாகவும்
மாயோன் வழிபடல் மால்மத மாகவும்

இருமதம் சேர்ந்ததே இயல்தமிழ் மதமென
பொருள்சேர் கருத்தைப் புரிந்திடக் காட்டி,
நடுநிலை யோடு நல்லோர் ஏற்றிடக்
கடுமுழைப் பாலே கடவுள் சமய

நெறிமுறை வகுத்த நெடும்புகழ்க் குன்றம்
வழிபடு வதற்கே வரும்பொருள் அனைத்தும்,
விழிப்பிலா மாந்தனாய் வீணடிக் காமல்
உளத்தில் நிறுத்தி உய்ந்திட நல்வழி

பலவு மளித்த பரிதியே!
பாவா ணன்நின்புகழ் நிலைக்கும்பல் லாண்டே!




புலவர் செ. இராமலிங்கன்.