தமிழ்ப் பாவாணர்


(எண்சீர் விருத்தம்)

"தமிழ்தன்னை நிலைப்படுத்திக் கொள்ளு தற்கே
.....தகும் உணர்வால் எனை இறைவன் படைத்தான்" என்றே
தமிழுக்கே வாழ்நாளை ஒப்ப டைத்துத்
.....தமிழொன்றே குறிக்கோளாய் வாழ்ந்த சான்றோர்
அமிழ்ந்துநிகர் பாவாணர் ஐயா, ஆய்வும்
.....அகரத்தில் தொடங்கிநின்றே ஆசை என்னும்
தமிழ்ச்சொல்லில் முடிந்ததெனில் ஊழி காணாத்
.....தமிழ்நேயர் தமிழ்மீட்பர் எவரு முண்டோ?

சீரார்ந்த செந்தமிழின் சுவையுள் மூழ்கிச்
.....சிந்தையணு உயிரெல்லாம் சிலிர்க்கக் கற்றோர்!
பேரார்ந்த நிலநூலும் மாந்த நூலும்
.....பிறமேலை மொழிநூலும் ஆழ்ந்தே கற்றார்!
வேரார்ந்த சொல்பலவும் நுணுகி ஆய்ந்தே
.....வியனுலகின் முதன்மொழியோ தமிழ்தா னென்றார்!
கூரார்ந்த அறவாணர் பாவா ணர்தம்
.....கொள்கைமனம் ஓவாமல் தவமேற் கொண்டே!

தொல்லுலகில் முதல்மாந்தன் தமிழன் என்றும்,
....."தூய்தமிழே ஆரியத்தின் மூல" மென்றும்
சொல்லுதமிழ் மாந்தனவன் பிறந்த கந்தான்
.....தென்குமரிக் கண்டமென்றும் பாவா ணர்தாம்
வெல்லுந்தமிழ்க் கொள்கையெனச் சொன்ன தெல்லாம்
.....வீறுடைய தமிழரெலாம் நோக்க வேண்டும்!
கொல்லுதமிழ் நோக்குடைய பகைவர் கூட்டம்
.....குறிகெட்டே ஓடுதற்குச் செய்தல் வேண்டும்!

வாடிநின்ற பயிர்கண்டே வாடி நின்ற
.....வள்ளலாரின் மனம்போல பாவா ணர்தாம்
நீடியநம் தாய்த்தமிழில் கலந்து விட்ட
.....நெருப்புநிகர் பிறசொல்லால் வருத்தம் கொண்டார்!
ஓடுகின்ற பேருந்து, விரைவான், தானி
.....உணவகம், தே நீர்க்கடை, குளம்பி, முற்றம்
ஏடெழுது கோல்தூவல், மிசை, முட் டான்போல்
.....எத்தனையோ தனித்தமிழ்சொல் படைத்துத் தந்தார்!

தொங்குவதால் ஞாலமென்றும் வட்ட மாகச்
.....சுற்றுவதால் கோளமென்றும் உலகி னுக்கே
பொங்குதமிழ்ப் பாவாணர் விளக்கஞ் சொல்வார்!
.....பூந்தமிழில் முழுநிலவே "வெள்ளு வா"வாம்!
மங்குநிலா காலத்தான் "காரு வா"வாம்!
.....மாதப்பேர் பன்னிரெண்டும், தமிழினாலே
இங்கினிதாய் கூறிடுவார்! ஒன்ப தென்னும்
.....எண்ணிற்குத் தொண்டென்னும் சொல்லைச் சொல்வார்!

பிந்திவந்த ஆரியத்தின் சொற்கள் தம்மில்
.....பீடுதமிழ் ஐந்திலிரு பகுதி என்றார்!
செந்தமிழர் சமயமெலாம் இந்து வல்ல!
.....சிவனியமும், மாலியமும் என்றே சொன்னார்!
எந்தவொரு மதத்தினையும் பின்பற் றாமல்
.....இனியதமிழ்க் குறள்நெறியே போற்றி வந்தார்!
இந்தியநம் வரலாற்றைத் தெற்கி ருந்தே
.....எல்லோரும் தொடங்கிடவே வேண்டு மென்றார்!

வேறு

பாவாணர் நூற்கள் படித்தறிவோம்! அவ்வழியில்
வேவுதமிழ்க் காப்போம் மிளிர்ந்து!




புலவர் திருக்குறள் நாவை சிவம்,
மணற்பாறை - 621 306.