நிலவுக்கும் கதிர்கள் உண்டு
எண்சீர் விருத்தம்
உள்ளத்தால் பொய்யாத நண்பர் தோட்டம்!
உலகத்தார் புகழ்கின்ற கவிதைப் பூங்கா!
வெள்ளத்தைப் போல்திரண்ட பாவல் லார்கள்!
வினையாற்றல் மறவர்கள் மகளிர் நல்லோர்!
அள்ளஅள்ள குறையாத அறிவு கொண்ட,
ஆன்றோர்கள் சான்றோர்கள் - சுவைஞர் மற்றும்
எல்லார்க்கும் மாலிறையன் வணக்கந் தந்தேன்;
இவ்வரிய மன்றத்தில் கவிதை வைத்தே!
சீரோடுஞ் சிறப்போடும் வாழ்ந்த வெங்கள்
செந்தமிழின் அரிதான பெருமை தன்னை,
வேரோடு பெயர்த்தழிக்க வினைக ளாற்றும்
வீணர்கள் பெருகிவிட்டார்; நகரி லெங்கும்
நேரோடு சாலையெனும் சிறப்புக் கொண்ட
நிழற்புதுவை தனிலின்று அரிதாய்க் கண்டேன்
பேரோடு செந்தமிழ்த்தாய் வாழு கின்ற
பெருமைமிகு தமிழன்பன் வருகையாலே!
எங்கெங்கே தமிழகத்தில் தேடி னாலும்
எவருமும்போல் கிடைக்கவில்லை; வகைவ கையாய்
தங்கங்கள் கிடைத்தாலுந் தமிழைப் பேணுந்
தலைவர்கள் கிடைக்கவில்லை; ஆத லாலே
இங்குவந்த தமிழன்பர் உம்மைக் கண்டேன்
இதயத்தால் வணங்குகின்றேன் தமிழை யெண்ணி
எங்கெங்குச் சென்றாலுந் தமிழ்மே லன்பை
எல்லார்க்கு மூட்டுகின்றச் சிறப்பி னாலே;
நிலவுலகைச் சூழ்ந்துள்ள கடலி லின்று
நிறைந்துள்ள உயிர்க்கூட்டங் கோடி கோடி
அலைகடலி லமைதியாகச் செல்லுங் கப்பல்
ஆயிரம்பல் லாயிரமாய்ப் பெருகும்; இந்நாள்
வலைவீசி மீன்பிடிப்பார் வைய மக்கள்
வருத்தமாய் வந்துவந்து தொட்டு மீளும்
அலைவரிசைக் களவில்லை; ஆனால் இன்றே
கைவரிசைக் காட்டியதேச் "சுனாமி" என்றே!
அமைதிக்குள்ளே தோன்று மார வாரம்
ஆருக்கும் புரியவில்லை மிகச்சின் னேரம்
இமைதிறந்து மூடுதற்குள் "குப்ப" மெல்லாம்
எழுப்பாதக் கல்லறையாய் மாறுங் காட்சி
அமைந்திருக்கும் நுட்பமிதி லென்ன வென்றால்
அனைவருக்கும் முடிவிதுதா னென்ப தொன்றே!
சுமையான வாழ்க்கையிதைச் சுவையாய்க் கொள்ளச்
சுனாமியொடும் பழகும்பக் குவவே வேண்டும்!
நீலவா னாடைக்குள் உடல்ம றைத்த
நிலாவுக்குச் சொந்தமா யொளியே இல்லை
கோலவான் சூரியனி னொளியைக் கொண்டு
கொடுப்பதென அறிஞர்கள் தொன்ன தாலே
காலமெலாம் கவிஞர்கள் சொல்லி வந்த
கற்பனைகள் வெற்றினையும் புறத்தில் தள்ளிப்
பாலுண்ணுங் குழந்தைகளே நம்மை யெல்லாம்
பரிகாசம் செய்கின்ற நாளி லுள்ளோம்!
சுட்டெரிக்க முடியாது நிலாவா லென்று
சொல்லுபவர் நடுவில்தான் மற்றும் சில்லோர்
வெட்டவெளி நிலாவொளியில் படுத்தி டாதே
வெப்பமிகும் எனச்சொல்வார் - நமது கண்முன்
குட்டகுட்ட குனிகின்ற கூட்ட மோர்நாள்
குன்றத்தைப் போல்நிமிர்ந்து குட்டு வாரை
வெட்டிவெட்டி வீழ்த்திவிட முனையு மன்றோ
வீரத்தை விளைப்பதும்மக் களவே யாகும்!
அஞ்சியஞ்சிச் செத்திருந்த அடிமைக் கூட்டம்
அஞ்சாம லெழுச்சிகொண்ட வரலா றுண்டு
வஞ்சிவஞ்சி எனக்கூறி அடக்க் வைத்து
வஞ்சத்தைப் புரிந்துகெட்ட ஆட வர்கள்
இஞ்சிதின்ற குரங்கைப்போல் விழிக்கின் றாரே
இதுகூட எழுச்சிநிலை தனையே கூட்டும்
பஞ்சுதானே யெனயெண்ணி மேலும் மேலும்
பாரத்தை ஏற்றுவதும் மடமை யன்றோ!
பூவுக்குள் புவியதிர்ச்சி தோன்றா தென்றால்
பொறுமைக்குள்ளே எழுச்சி தோன்றி டாதோ!
பாவுக்குள் நற்கருத்துப் படர்ந்து வந்தால்
பாரகத்தைக் கீழ்மேலாய்ப் புரட்டிடாதோ!
சாவுக்குள் நந்தமிழை நிற்க வைத்து
சதிராடு மொருகூட்ட மதனை வெல்ல
மாவூக்கம் கொலவேண்டும் தமிழர், இன்றேல்
மார்தட்டும் தகுதிநமக் கினிமேல் இல்லை!
அடக்குமுறை எப்போதும் செல்லாக் காசு
ஆணவத்தால் அமைதியதன் நிலையும் மாறும்
ஒடுக்கிவைத்தே உலகாண்டார் எந்த நாளும்
உயர்நிலையில் நின்றதில்லை; யானை கூடத்
தடுக்கிவிழும்; அந்தநேரம் புலியும் வெல்லும்
தமிழர்கள் நாமெல்லாம் நிமிர்ந்தெ ழுந்தால்
முடக்கிவைத்த முன்னேற்றம் முழுதும் பெற்று
முழுநிலவாய் முகங்காட்டி முன்னிற் போமே!
அச்செடுக்க
புலவர் துரை. மாலிறையன்
புதுச்சேரி
|