ஒற்றுப் பிழைகள் - 1
வல்லெழுத்து மிகுமிடங்கள்:கீழ்வரும் உதாரணங்களின் படி இரு சொற்கள் சேரும் போது, இரண்டாவது சொல்லின் முதலெழுத்து க், ச், த், ப், முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர் மெய்யெழுத்துக்களாக இருப்பின் (உம் - க, கா, ச, சா, த, தா, ப, பா முதலானவை) நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்கள் சில விதிகளின் படி, சில சொற்களில் மட்டும் நடுவில் சேரும். இதனையே வல்லெழுத்து மிகுதல் என்கிறோம். தேர்வுகளிலும், கட்டுரைகளிலும் மாணவர்கட்கு மதிப்பெண்கள் குறைவதற்கு முக்கிய காரணம் வல்லெழுத்து மிகும்/மிகா இடங்களை அறியாமையே. சாதாரணமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள் மட்டுமே இங்கு விளக்கப் பட்டிருக்கிறது. இவற்றை நினைவு கொண்டாலே பெரும்பால பிழைகளை நீக்கிவிடலாம். :-
வல்லெழுத்து மிகும் உதாரணங்கள்::-
- தமிழை + கண்டேன் = தமிழைக் கண்டேன்.
- தமிழை + சந்தித்தேன் = தமிழைச் சந்தித்தேன்.
- தமிழை + தந்தேன் = தமிழைத் தந்தேன்.
- தமிழை + பார்த்தேன் = தமிழைப் பார்த்தேன்.
அதிகமாகப் பிழை செய்யுமிடங்கள்::-
கீழ்வரும் இடங்களில் பொதுவாக அனைவருமே ஒரு சில சமயங்களில் தவறுகிறோம்:- -
- இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் மிகும் (உருபு = ஐ):-
(உ-ம்)
இலக்கணத்தை + படித்தேன் = இலக்கணத்தைப் படித்தேன்,
இலக்கியத்தை + கண்டேன் = இலக்கியத்தைக் கண்டேன்,- நான்காம் வேற்றுமை உருபிற்குப் பின் மிகும் (உருபு = கு):-
(உ-ம்)
தமிழுக்கு + பொன்னாள் = தமிழுக்குப் பொன்னாள்
தேர்வுக்கு + போனான் = தேர்வுக்குப் போனான்- ஏழாம் வேற்றுமை உருபையடுத்து மிகும் (உருபு = இடை):-
(உ-ம்)
நல்லாரிடை + புக்கு = நல்லாரிடைப் புக்கு- ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறிணைப் பெயர்களின் பின் மட்டும் மிகும் (உருபு = அது, உடைய):-
(உ-ம்)
யானை + கால் = யானைக்கால் (யானையினது கால்)- இரண்டு, மூன்று, ஐந்து, எழு ஆகிய உருபும் பயனும் உடன்தொக்கத் தொகைகளில் மிகும் :-
(உ-ம்)
இரண்டாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மோர் + குடம் = மோர்க் குடம் (மோரை உடைய குடம்)
மூன்றாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மர + கதவு = மரக் கதவு (மரத்தால் ஆன கதவு)
ஐந்தாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மலை + கல் = மலைக் கல் (மலையினின்று வரும் கல்)
ஏழாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
நீர் + செடி = நீர்ச் செடி (நீரின் கண் உள்ள செடி)
பொதுவாக வல்லெழுத்துக்கள் மிகும் சில இடங்கள்::-
பின்வரும் சொற்களையடுத்து வரும் வல்லெழுத்துகள் மிகும்:- அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி, அங்கு, இங்கு, எங்கு, இனி, தனி, என, மற்ற, மற்று, மற்றை, முன்னர், பின்னர், எல்லா, அவ்வகை, இவ்வகை, எவ்வகை.
(உ-ம்)- அந்த + கரண்டி = அந்தக் கரண்டி.
- இந்த + சிற்பம் = இந்தச் சிற்பம்.
- எந்த + பட்டம் = எந்தப் பட்டம்.
- அப்படி + போனான் = அப்படிப் போனான்.
- இப்படி + பார்த்தான் = இப்படிப் பார்த்தேன்.
- எப்படி + கண்டான் = எப்படிக் கண்டான்.
- அங்கு + சென்றான் = அங்குச் சென்றான்.
- இங்கு + தங்கினான் = இங்குத் தங்கினான்.
- எங்கு + கண்டாய் = எங்குக் கண்டாய்.
- இனி + கேள் = இனிக் கேள்.
- தனி + தமிழ் = தனித் தமிழ்.
- என + சொன்னாள் = எனச் சொன்னாள்.
- மற்று + பாடலாம் = மற்றுப் பாடலாம்.
- மற்ற + குதிரைகள் = மற்றக் குதிரைகள்.
- மற்றை + கனவு = மற்றைக் கனவு.
- முன்னர் + கண்ட = முன்னர்க் கண்ட.
- பின்னர் + கேட்ட = பின்னர்க் கேட்ட.
- எல்லா + பெண்கள் = எல்லாப் பெண்கள்.
- அவ்வகை + சிற்பம் = அவ்வகைச் சிற்பம்.
- இவ்வகை + பண்பு = இவ்வகைப் பண்பு.
- எவ்வகை + தோற்றம் = எவ்வகைத் தோற்றம்.
வல்லெழுத்து மிகும் மற்றும் சில இடங்கள்:-
பின்வரும் சொற்களையும், பொருள் தரும் தனி நெடியலையும் அடுத்து மிகும்:-
(உ-ம்)- பின்வரும் எழுத்துகளில் வருமொழி, பெயர்ச் சொல்லாக இருந்தால் மட்டுமே மிகும்:-
அ, இ, எ, ய், ர், ழ்
(உ-ம்)
அ + பக்கம் = அப்பக்கம்,
இ + குரல் = இக்குரல்,
நாய் + பாசம் = நாய்ப்பாசம்
தமிழர் + பண்பு = தமிழர்ப் பண்பு
தமிழ் + பயன் = தமிழ்ப் பயன்
- ஓரெழுத்தொரு மொழி:-
தீ, பூ, ஈ
(உ-ம்)
தீ + கனல் = தீக்கனல்,
பூ + சரம் = பூச்சரம்,
ஈ + பண்டம் = ஈப்பண்டம்
- உவமைத் தொகை:-
(உ-ம்)
மதி + குடை= மதிக் குடை (மதியொத்தக் குடை)- பண்புத் தொகை:-
(உ-ம்)
புது+ பெண்= புதுப்பெண்(புதுமையான பெண்)- "த்து" என்று முடியும் சொற்களையடுத்து:-
(உ-ம்)
பார்த்து + போனான் = பார்த்துப் போனான்
காத்து + கிடந்தான் = காத்துக் கிடந்தான்- ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் அடுத்து:-
(உ-ம்)
பாடா + கிளி= பாடாக் கிளி (பாடாத கிளி)
ஒடா + தேர் = ஒடாத் தேர் (ஓடாத தேர்)- இரு பெயரொட்டுப் பண்புத்தொகை அடுத்து:-
(உ-ம்)
சாரை + பாம்பு = சாரைப் பாம்பு
மருத்துவ + கல்வி = மருத்துவக் கல்வி
வினையெச்சங்களில் ஒற்று:-
பின்வரும் சொற்கள் வினையெச்சங்களாக வந்தால் மட்டுமே ஒற்று மிகும்.
(உ-ம்) ஆக, ஆய், போய், அன்றி, இன்றி, போல்
(உ-ம்)- நன்றாக + பாடினாள் = நன்றாகப் பாடினாள்.
- ஓடுவதாய் + சொன்னான் = ஓடுவதாய்ச் சொன்னான்.
- போய் + செய் = போய்ச் செய்.
- அன்றி + சொல்லான் = அன்றிச் சொல்லான்.
- இன்றி + போவான் = இன்றிப் போவான்.
- போல + செய்= போலச் செய்.
இல்லம்/ 1/ 2/ 3/ 4/ 5/ 6/ 7/ 8/ 9/ 10/ 11/ 12