ஆ. குணநாதன்,
மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசியா
மின்னஞ்சல்: a_g_mala@tm.net.myஇரண்டாம் உலகப் போரைப் பின்னணியாகக் கொண்ட மலேசியத் தமிழ் நாவல்கள் (கடைசிப் பகுதி)
அழுதால் உன்னைப் பெறலாமே!
"தோட்டக் கிராணியின் மகனான கோபாலனுக்கும், அடே தோட்டத்துக் கங்காணி மகளான மல்லிகாவிற்கும் இடையில் நடக்கும் காதல் பற்றிய கதை. மாறுபட்ட சமூகப் பொருளாதார வாழ்க்கை நிலையைக் கொண்ட இருவரும் இல்லற வாழ்வில் இணைவதில் பிரச்சனைகள் தோன்றுகின்றன. இந்நிலையில் கோபாலனும், மல்லிகாவின் தகப்பனாரும் சயாம் மரண இரயில் பாதை போடச் செல்ல நேரிடுகிறது. அங்கிருந்து இருவரும் எப்படியோ தப்பித்து விடுகின்றனர். இருப்பினும் நோய் மற்றும் காயங்களின் காரணமாக மல்லிகாவின் தகப்பனார் இறக்க, கோபாலன் மட்டும் தப்பி வந்து மல்லிகாவைக் கரம் பிடிக்கிறான்."
சிறிய நாவலான இதில், போர்ப் பின்னணி இரண்டொரு அத்தியாயங்களில் மட்டுமே உள்ளது. கதைக் கருவிற்கு காதலே முக்கியத்துவம் பெற்றுள்ளதால், யுத்தகாலப் பின்னணி அவ்வளவாக சோபிக்கவில்லை.
சயாம் மரண இரயில்:
நாவலின் தலைப்பே இரண்டாம் உலக யுத்தத்தை ஞாபகப்படுத்துவதாக உள்ளது. தோட்டத்து இளைஞனான மாயக் கிருஷ்ணன் என்ற மாயா (வயது இருபது), சயாம் சென்றுவிட்ட தன் தகப்பனாரைத் தேடிச் செல்கிறான். இரயிலில் வேலு என்பவனின் நட்பு கிடைக்கிறது. எழுத, படிக்கத் தெரிந்த மாயாவிற்கு நிப்பானியர் கங்காணி வேலையைத் தருகின்றனர்.
சயாமில் வேலைச் செய்யும் இடத்தில் மளிகைக் கடை வைத்திருக்கும் சயாமியக் குடும்பத்தைச் சேர்ந்த அங்சாலா என்ற பெண்ணின் நட்பு மாயாவிற்குக் கிட்டுகிறது. மாயா அங்சாலாவை காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான். இடையில், தன் உடன்பிறவாச் சகோதரன் போல் பழகி வந்த வேலு, அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்படுகிறான். பின்னர் அக்கொலையைச் செய்தவர்களுள் தன் தகப்பனாரும் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறான். இருப்பினும் கொலையாளிகளுக்கு நிப்பானியர் மரண தண்டனை விதித்து நிறைவேற்றுகின்றனர். தன் அப்பா மறுமணம் செய்து கொண்ட சயாமியப் பெண்ணையும், அவளது குழந்தையையும் மாயா பராமரிக்கிறான். இறுதியில் மாயா தன் மாமனாருடன் பாங்காக் சென்று வியாபாரம் செய்வதாகக் கதை முடிகிறது.
இந்நாவல் சினிமாத்தனமான கதை மாந்தர்களைக் கொண்டதாக உள்ளது. சயாம் மரண இரயில் போடச் சென்ற தமிழர்கள் பட்ட துயரினை நல்ல முறையில் ஆசிரியர் விளக்கியுள்ளார். அதே நேரத்தில் மாயா - அங்சாலா காதல் சந்திப்புகளையும் சிறப்பாகக் காட்டியுள்ளார்.
சாதாரணத் தமிழில் நாவலின் உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. சயாம் காட்டில் தமிழர்களின் உணவு முறை, தீபாவளி கொண்டாடிய விதம், நேதாஜியின் வருகை, அங்கேயும் சூதாட்டம், சயாமியப் பெண்களுடன் சல்லாபம், இன்னும் பல விஷயங்களைக் கதையினூடே ஆசிரியர் கொண்டு வருவது பாராட்டுக்குரியது.
கதை மாந்தர்கள்:
எல்லா நாவல்களிலும் நல்லவர்கள், தீயவர்கள் என்ற பாகுபாடு உள்ளது. கதை மாந்தர்களின் குணநலன்களை ஆசிரியர் விளக்கி விடுவதால், வாசகர்கள் சிரமப்படத் தேவையில்லை. மரவள்ளிக் கிழங்கு நாவலின் மூன்றாவது அத்தியாயத்தில் கதாசிரியர் மாரிமுத்து - சீனியம்மாள் இருவரின் முதல் சந்திப்பு பற்றி விவரிக்கும் கதை உள்ளது. இக்கதையினூடே இருவரது குணநலன்களும் விவரிக்கப்படுகின்றன. மரவள்ளிக் கிழங்கு நாவலில் மாரிமுத்து, சிங்காரம் நல்லவர்களாகக் காட்டப்படுகின்றனர். குருத்தோ முருகப்பன் ஆரம்பம் முதல் இறுதிவரை கெட்டவனாகச் சித்தரிக்கப்படுகின்றான். இந்நாவலில் மேலும் தாமோஜா, நீக்கோ ஆகிய நிப்பானியக் கதை மாந்தர்களும் உள்ளனர்.
புதியதோர் உலகத்தில் கிராணியார் மட்டும் முதலில் மக்களின் விரோதியாகக் காட்டப்பட்டிருந்தாலும், (எட்டாவது அத்தியாயம்), அதன்பின் நோயின் காரணமாக மனந்திருந்தி, தோட்ட மக்களொடு நட்புறவு கொள்கிறார். இந்நாவலில் கருப்பையாக் கங்காணி, ஒயிலாட்ட வாத்தியார் நல்லதம்பி, வெள்ளையன், சங்கிலி, கோக்கி முருகன், வேலு, காத்தான், செலாங்கு, பாக்கியம், மூக்காயி, நெடும்பி, வோடும்பிள்ளை, தயா, சின்னப்பிள்ளை, பெரியபிள்ளை என்றொரு பட்டாளமே உள்ளது.
சயாம் மரண இரயில் நாவலில் மாயா, அங்சாலா, பரமசிவம், ராமசாமி, நாகப்பன், மாரி, தைச்சோ, சீயம் படகுக்காரி என நிறைய கதைமாந்தர் உள்ளனர். மாயாவும் அங்சாலாவும் அழகும் கவர்ச்சியும் மிக்கவர்களாக ஆசிரியர் இந்நாவலில் காட்டியுள்ளார். இந்த நாவல்களில் காணப்படும் கதைமாந்தர் அனைவரும் சாதாரண வாழ்க்கை நிலையில் உள்ளவர்களை ஒத்தே உள்ளனர்.
ஆசிரியர் குறுக்கீடு
நாவல்களில் அதன் ஆசிரியர்கள் குறுக்கீடு செய்து பல கிளைக் கதைகளைச் சொல்வது ஒன்றும் புதிதல்ல. இதை தொடக்க காலத் தமிழ் நாவல்களில் காணலாம். இத்தகைய குறுக்கீடானது வாசகர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தும். தேவையற்ற கிளைக்க் கதைகள், வர்ணனைகள் காணப்படும். இவை கதையின் வேகத்தைத் தடைப்படுத்தும். இத்தகைய போக்கு மேற்காணும் நாவல்களில் காணப்படவில்லை. இருப்பினும் சயாம் மரண இரயில் மற்றும் புதியதோர் உலகம் ஆகிய இரு நாவல்களிலும் பல விஷயங்களை விலாவாரியாக ஆசிரியர் கதைமாந்தர்கள் மூலம் கூறுவதால், வாசகர்களுக்குச் சற்று சலிப்பு வரலாம்.
சமகால நிகழ்ச்சிகள்
இந்த நாவல்கள் அனைத்தும் 1935 முதல் 1945 வரையிலான காலப்பகுதியில் நடப்பதாக எழுதப்பட்டுள்ளன. எல்லா நாவல்களும் தோட்டப்புறச் சமுதாயத்தின் வாழ்க்கை நிலையை நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளன.
(௧) நேதாஜியும் இந்திய தேசிய இராணுவமும் (அய்.என்.ஏ)முடிவுரை:
இரண்டாம் உலகப் போரின் போது நேதாஜி என்ரு இந்தியர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் நிப்பானியர்களுடன் கூட்டு சேர்ந்தார். அவர் உருவாக்கிய இந்திய தேசிய இராணுவம், தென்கிழக்கு ஆசியா இந்தியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. நேதாஜியின் மலாயா வருகையைப் பற்றியும் அய்.என்.ஏ. விற்கு ஆள் சேர்ப்பது பற்றியும் விஷயங்கள் மரவள்ளிக் கிழங்கு, புதியதோர் உலகம், சயாம் மரண இரயில் ஆகிய நாவல்களில் உள்ளன.
(௨) நாட்டின் பொருளியல் நிலை
போரின் குடுமைகள் எப்படி இருக்குமென்று இக்காலத்து வாசகர்களுக்கு உணர்த்துவதில் ஆசிரியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இரண்டாவது உலகப் போர் தொடங்கியவுடன் வெளிநாட்டு முதலாளிமார்கள் தோட்டத்தை விட்டு விட்டு வெளிநாட்டுக்கு சவாரி விட்டனர். எனவே தோடங்களில் பெரும்பாலும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியது. அரிசிச் சோற்றுக்கு ஆலாய்ப் பறந்தது கூட்டம். போருக்கு முன்போரளவுத் தமிழர்கள் சம்பாதித்தனர். மரவள்ளிக்கிழங்கு நாவலில் இதனை இப்படிக் குறிப்பிடுகிறார்:
"வெள்ளைக்காரன் ஆட்சியில் ஒரு காசி இரண்டு காசு விலைக்கே வியாபாரம் பண்ணலாம். அப்போதே பெரிய சம்பளமாக எட்டு வெள்ளிக்கு வேலை செய்தவன் மாரிமுத்து (பக்கம்: பதினேழு)"ஆனால் போர் வந்ததும், பசி, பஞ்சம், பட்டினி மக்களை வாட்டியது. அன்றைய மக்களின் உணவாக விளங்கியது மரவள்ளிக்கிழங்கு. சில சமயங்களில் கீரை வகைகளும், வாத்து கோழி முட்டைகளும், ஆற்று மீன்களும், கூட உணவாகியுள்ளன. உடைகளுக்குப் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் சாக்குகளை அணிந்து மானத்தை மறைத்த கொடுமைகளும் உள்ளன. வேலையில்லாமல் இருப்பத்தைக் காட்டிலும், சயாம் சென்றாவது பிழைக்கலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு சென்றவர்களும் உள்ளனர் என்பதை இந்நாவலகள் வழி அறியலாம்.
(௩) நிப்பானியரின் கொடுங்கோல் ஆட்சி
பிரிட்டிஷாரிடமிருந்து மலாயாவையும் தங்களையும் மீட்க வந்த இறைத்தூதன் என்றுதான் அப்போஉது மக்கள் நிப்பானியர்களை எண்ணினர். பின்னர், அவர்களுக்கு நிப்பானியரின் கொடுங்கோல் ஆட்சி எப்போது முடிவுறும் என்று எண்ணி வேதனைப்பட அதிக காலம் பிடிக்கவில்லை. எல்லா நாவல்களிலும் நிப்பானியரின் கொடுமைகள் கூறப்பட்டுள்ளன. சயாம் காடுகளில் அவர்களது கொடுமைகள் பற்றி சயாம் மரண இரயில் ஆசிரியர் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். புதியதோர் உலகம் நாவலிலும் அவர்களது கொடுமைகளைக் காணலாம்.
"என்கூட வந்தவங்க யாருமே இப்ப உயிரோடு இல்லை கங்காணி. இந்த கையைப் பாத்தீங்களா. மரம் விழுந்து எடும்பு முறிஞ்சு போச்சு. அதுக்காக கதறக் கதற ரம்பத்தை போட்டு அறுத்து வீசிட்டான்க கையை!(புதியதோர் உலகம் - பக்கம்: இருநூற்று எழுபத்தெட்டு)
"வேதநாயகத்தால் வேலை செய்ய முடியவில்லை. மண் கூடையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு நடந்த போது ஏதோ ஒரு குச்சி சிரங்குப் புண்ணில் குத்திவிட்டது. அய்யோ என்றவன் கூடையைக் கீழே வைத்தான். அவ்வளவுதான். அதற்குமேல் அவன் நிமிரவில்லை; நீக்கோவின் பட்டாக்கத்தி அவனைத் துண்டித்து வீழ்த்தியது." (மரவள்ளிக்கிழங்கு - பக்கம்: அய்ம்பத்தெட்டு)
(௪) சயாம் மரண இரயில் பாதை
இரண்டாம் உலகப் போரின் போது மலாயாவிலிருந்து சயாம், பர்மா வழியாக இரயில் பாதைப் போட வேண்டும் என்று நிப்பானியர் திட்டம் போட்டனர். இதற்காக பல்லாயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களை நிப்பானியர்கள் கொண்டு சென்றனர். அவர்களுள் திரும்பியோர் சொற்ப எண்ணிக்கையினரே. மரவள்ளிக்கிழங்கு, சயாம் மரண இரயில், அழுதால் உன்னைப் பெறலாமே ஆகிய நாவல்களில் சயாம் காடுகளில் பாதை போடும் பணி ஆற்றிய கதை நிகழ்ச்சிகள் உள்ளன. இவற்றுள் சயாம் மரண இரயில் அங்குள்ள வேலை முறை, சம்பளம், சுகாதார வசதி, உணவு, தங்கும் வசதி பற்றியெல்லாம் விரிவாக விளக்குகிறது.
"இந்த நாவல்கள் அனைத்துமே எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளன. கதை மாந்தர்களின் பேச்சுகள் அன்றாட வாழ்வில் கேட்கும் பேச்சுகளாகவே அமைந்துள்ளன. இந்த நாவல்கள் மலேசியத் தன்மையைக் கொண்டிருக்கின்றன. 1940-களில் உள்ள சூழ்நிலையை இவை நிலைக்களமாகக் கொண்டிருக்கின்றன. அக்கால கட்டத்தில் மலாயா வாழ் இந்தியர்களின் வாழ்க்கை முறை, பொருளாதார நிலை போன்ற விஷயங்களோடு நாட்டின் பொருளியல் நிலை அடிப்படை வசதிகள் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள முடிகிறது. போரின் விளைவுகள் எத்துணை துன்பமயமானது என்பதனையும் அறிய முடிகிறது. போர்க்களமாக மாறிவிட்ட மாலாயா மண்ணில் வாழ்வதற்கு போராட்டம் நடத்தியத் தமிழர்களின் பரிதாபகரமான நிலை நன்கு படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.
வரலாற்று நிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்ட எழுத்தோவியங்களைப் படைப்பது கஷ்டம்தான். ஏனெனில், படிப்போரை அக்கால கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் படைப்பாளர்களுக்கு இருக்க வேண்டும். வரலாற்றுச் செய்தியைக் கதைக்கருவாகக் கொண்டு, கற்பனைக் கதையையும் கலந்து சுவாரசியமாக நாவல் படைப்பது அவ்வளவு எளிதன்று. அந்த வகையில் மேற்சொன்ன நான்கு நாவல்களுமே நல்ல கதைப் பின்னலுடன் படைக்கப்பட்டுள்ளன. நமது நாடு மண்ணில் நடைபெற்ற போரைப் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. மலேசியத் தமிழ் நாவல் நாவல் இலக்கியத்திற்கு இந்த நாவல்கள் மேலும் பெருமை சேர்க்கின்றன. இதுபோன்ற வரலாற்றுப் பூர்வமானவற்றைக் கதைக் கருவாகக் கொண்ட நாவல்கள் வெளிவருவது ஊக்குவிக்கப்பட வேண்டும். இவை நமது நாடுத் தமிழ் நாவல் துறைக்கு வளம் சேர்க்கும்.
துணை நூல்கள்
- அன்பானந்தன். சா. ஆ - மரவள்ளிக்கிழங்கு, மூவேந்தர் பிரஸ் 1979.
- ரெங்கசாமி. அ., புதியதோர் உலகம், 1993.
- சண்முகம். ஆர்., சயாம் மரண இரயில், 1993.
- சந்திரகாந்தம். ப., அழுதால் உன்னைப் பெறலாமே! 1976.
- சபாபதி. வே., மலேசியாவின் முதல் துப்பறியும் நாவல், ஆறாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர், பக்கம் - நூற்றுமுப்பத்தொன்பது, 1987.
- தண்டாயுதம். இரா., மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளில் தோட்டப்புற சமுதாயம் (கட்டுரை)
- சிவகங்கைச் சீமை - இந்திய விடுதலைப்போர்
நன்றி
1. தமிழ்ப்பிரிவு நூலகம், மலாயாப் பல்கலைக் கழகம்.
முற்றும்.
-:o:O:o:-