தணற் புரட்சி

எண்சீர் விருத்தம்


எந்தமனம் நல்லமனம் தெரிய வில்லை
   இங்குவளர் உயிர்களெலாம் ஒருநாள் போகும்!
சொந்தநலம் கொண்டுபுகழ் வெறியில் வாழும்
   சொத்தைகளை இந்தநிலம் தாங்கு தந்தோ!
முந்துபுகழ் கொண்டதமிழ் வாடு திங்கே
   மூடரிவர் தன்னைவியந் தாடு கின்றார்!
வெந்தபுணில் வேலைநுழைக் கின்றா ரந்தோ
   வேரினிலே வெந்நீரை ஊற்று கின்றார்!

கல்விமொழி தமிழெனவே சொன்ன பின்னும்
   கவலையிலாத் தமிழரினம் தாழு திங்கே!
புல்லரிவர் ஆங்கிலமே போற்று கின்றார்
   பொய்மையெனத் தமிழ்ச்சொலியே வாழு கின்றார்!
சொல்லுகின்ற தமிழிநலம் அழித்தா ரிங்கே!
   துளியுமொரு செயலுமிலை இவரால் இந்த
வெல்லநிகர் தமிழினியும் வாழ்த லில்லை!
   வளம்பெருகு நலமுமினி தமிழுக் கில்லை!

பிரஞ்சுமொழி கற்கவழி தேடு கின்றார் -
   பீடுபெற இந்திவழி யோடு கின்றார்!
இரங்குநிலை பெற்றார்நம் தமிழ ரெல்லாம்
   இந்தநிலை மாற்றிவிட யார்து ணிந்தார்?
அரங்குதனிற் பேசுவதில் அரிமா எல்லாம்
   ஆற்றாலொடு சிறுத்தையென வெளியில் வந்தே
தரமுமிகு தமிழிநிலை சொல்லு வாயே!
   தணலுமிகு புரட்சிதனை விளைப்பா யின்றே!




பாட்டறிஞர் இலக்கியன்
புதுச்சேரி