பெரியார் சொற் கேள்!
அறுசீர் விருத்தம்
தந்தை பெரியார் சொன்னவற்றைத்
தலைமேற் கொள்ளாத் தமிழர்கள்!
நொந்து மடிந்து வருகின்றார்!
நோவை யறியா திருக்கின்றார்
வந்தோர் உரைத்த பொய்க்கருத்தை
வாய்மை யென்றே க்ருதுகின்றார்!
மந்த மான மதியுடையார்
வாழ்வி லென்று நலம்பெறுவார்!
வாழ்க்கை யென்றால் என்னவென்று
வாழ்வோ ரின்னும் அறியவில்லை!
கூழைக் குடித்து வாழ்ந்தோர்க்கும்
கும்பி யெரிந்து குலைந்தோர்க்கும்
தாழ்ந்த வர்க்கும் கடவுளர்கள்
தக்க வாழ்வைத் தந்தாரா!
ஊழும் பிறப்பும் மேலுலகும்
உண்டா மென்றே நம்பிவிட்டார்!
இறந்த பின்னே என்னவுண்டு;
எதனைக் கண்டார் இதுவரையில்!
துறவும் வோகம் ஆன்மீகம்
தூய ஆவி என்பதெல்லாம்
இறப்பைத் தடுக்க வருவதில்லை!
இன்ப முயிர்க்கு வேண்டுமென்றால்
சிறந்த மாந்த நேயத்தைச்
சீராய்க் கொண்டே வாழ்ந்திடுக!
பாட்டறிஞர் இலக்கியம்,
புதுச்சேரி
|