பாட்டில் அருளினை அன்பினை ஊட்டியே
பாரதி நமைவளர்த்தான் - தேன்
கூட்டில் இழிதரும் நற்சுவை கூட்டியே
கொள்க எனவுரைத்தான் - நம்
நாட்டில் நிலவிய அடிமை ஒழித்திட
அல்லல் பலவேற்றான் - தன்
பாட்டுத் திறத்தினால் வையம் முழுவதும்
பாலித்திட நினைத்தான்.
எட்டுத் திக்கும் வெற்றி கொட்டுமுரசென
யீடில் கவிபடைத்தான் - பகை
வெட்டியே வீழ்த்திட வெற்றியே சூடிட
வீர உணர்வளித்தான் - அன்று
தட்டி எழுப்பிய விடுதலை உணர்வினால்
தாயகம் மீட்டோமே - அவன்
சுட்டிய அருளினை அன்பினைக் கைவிட்டுச்
சுயநலங் கொண்டோமே!
அச்செடுக்க
கலைமாமணி கல்லாடன்
புதுச்சேரி