தளிர்களின் தண்ணீர் தாகம்

எண்சீர் விருத்தம்


நதியெல்லாம் இணைத்திடுவோம் நெஞ்சும் நெஞ்சும்
        நமக்குள்ளே இணைத்திடுவோம் ஒருமை காண்போம்!
விதியெல்லாம் செய்திடுவோம், கடலில் வீணே
        விழுகின்ற நீரெல்லாம் ஒன்று தேக்கி
பதியெல்லாம் பாய்ச்சிடுவோம் பயிர்வி ளைப்போம்!
        பட்டினமும் சிற்றூரும் குடிநீர் காண
நிதியெல்லாம் பெருக்கிடுவோம், நீர்ப்பெ ருக்கி
        மின்விளைப்போம், பொருளியலில் நிறைவைக் காண்போம்!

விழிப்புணர்வு பெற்றிடுவோம், நீர்வ ளத்தை
        வீணடிக்கும் செயல்களைவோம், தன்ன லத்துப்
பிழைப்பதனால் அடுத்ததலை முறையின் வாழ்வைப்
        பேதுறவே செய்கின்றோம், இதைத்த விர்ப்போம்!
மழைப்பிடிப்பை மேற்கொள்வோம், படுகை யெல்லாம்
        மழைநீரைக் கொண்டுசெல்வோம், குடிநீர் காப்போம்!
உழைப்பெல்லாம் திரட்டிநிலத் தடிநீர் காப்போம்!
        தளிர்களின்நீர்த் தாகத்தைப் போக்கு வோமே!



கலைமாமணி கல்லாடன்
புதுச்சேரி