கலைமாமணி திரு கல்லாடன்,
திருக்குடில், எண்:
21 வாணிதாசன் தெரு,
புதுச்சேரி -
605013
தொலைபேசி: 0413 2241689

எதிலும் முதன்மையெனும் ஏந்தல்


முன்னுரை:

          தமிழில் முதல் நாவல் என்றவுடன் "பிரதாப முதலியார் சரித்திரம்" நினைவுக்கு வரும்; "பிரதாப முதலியார் சரித்திரம்" என்றவுடன் வேதநாயகம் பிள்ளை நெஞ்சில் நிறைவார். மாயூரம் வேதநாயகர் முதல் தமிழ் நாவலாசிரியர், நாவல் என்னும் நவீனக் கதை இயற்றுவார்க்கு நல்வழி காட்டிய முத்தமிழ் வித்தகராவார்.

          வேதநாயாகர் திருச்சியை அடுத்த குளத்தூரில்
1826ஆம் ஆண்டு அக்டோவர்த் திங்கள் 11ஆம் நாள் பிறந்தார். இவருடைய பெற்றோர் சவரிமுத்துப் பிள்ளை, ஆரோக்கிய மரி ஆவர். தமிழும் ஆங்கிலமும் பயின்று நல்ல புலமையுற்றார். 1948ஆம் ஆண்டில் திருச்சி நீதிமன்றத்தில் ஆவணக் காப்பாளர் பணியில் அமர்ந்தார். 1850ஆம் ஆண்டில் மொழிபெயர்ப்பாளராகத் தேர்வு பெற்றார்.

          அவருடைய உண்மையும், உழைப்பும், திறமையும் அவருக்கு
1856ஆம் ஆண்டு நீதியரசர் பதவியைப் பெற்றுத் தந்தன. நீதியரசர் பதவியில் அமர்ந்த முதல் தமிழர், முதல் இந்தியர் என்னும் பெருமைக்குரியவர் இவர். அவருடைய மனைவியர் அடுத்தடுத்து இறக்க நேர்ந்ததால், அவர் ஐந்து பெண்களை மணக்கும்படி ஆயிற்று. அவர் தம் மூன்றாவது மனைவி மாணிக்கத்தம்மாளுக்கு மட்டுமே ஒரு ஆணும் இரண்டு பெண்களும் பிறந்தனர். அவருடைய வழித்தோன்றல்கள் பலவிடங்களில் வாழ்ந்து வருகின்றனர்; புதுவையிலும் சிலர் வாழ்கின்றனர். நிறைவாழ்வு வாழ்ந்த வேதநாயகர் 1889ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 21ஆம் நாள் மறைந்தும் மறையாத புகழில் நின்று ஒளிர்கிறார்.

கவிதை:

          "முதலில் இவர் ஒரு கவிஞர். இளமையிலேயே கவிபுனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவருடைய முதல் படைப்பே கவிதை நூல்தான்.

நீதி நூல்::

          இந்நூல், வேதநாயகர் அவ்வப்போது பாடிய கவிதைகளின் தொகுப்பு; தமிழ் மரபில் புனையப்பட்டது. அதன் பாடுபொருள், மக்கள் கொள்ள வேண்டிய நெறிகள், பின்பற்ற வேண்டிய நீதிகள், பெண் கல்வி, ஒருமையுணர்வு போன்ற புதிய சிந்தனைகள்; சமூக மாற்றாத்திற்கான முற்போக்குக் கருத்துகள். தமிழின் கவிதைப் போக்கில் ஒரு புதிய உத்தி, ஒரு முதல் முயற்சி.

பெண்மதி மாலை:

          மற்றொரு கவிதை இலக்கியம். பெண்கள் முன்னேற்றம் பற்றிய கவிதைகள், சந்தப் பாடல்களும், கீர்த்தனைகளும் அடங்கியவை. இந்நூல் வாயிலாக, வேதநாயகர் பெண்ணியத்திற்குக் குரல் கொடுத்த முதல் கவிஞராக மறுமலர்ச்சிக் கவிஞர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார். வேதநாயகர் வாழ்ந்த காலச் சமூக நிலைகள், அவர் கண்ட பட்டறிவு, அலுவலில் அவருக்கு ஏற்பட்ட இன்னல்கள் இப்படித் தன்னுணர்ச்சி வகையிலும் அவர் பாடல்கள் ஒரு புதிய போக்கைக் காட்டுகின்றன.

சமயப் பாடல்கள்:

          வேதநாயகர் பிறப்பால் கிறித்தவர், உணர்வால் தமிழர், கிறித்தவ வழிபாட்டு பாடல்கள் கிரேக்க்ம், இலத்தீன் முதலான மொழிகளில் இருந்த நிலையில், தமிழர்கள் தமிழிலேயே உணர்ந்து கிறித்துவையும், மாதாவையும் வழிபட வேண்டுமென்று தமிழில் திருவருள் மாலை, திருவருள் அந்தாதி, தேவமாதா அந்தாதி, தேவ தோத்திர மாலை, பெரியநாயகி அம்மைப் பதிகம் முதலிய சமய இலக்கியங்களைப் படைத்தார். இவை கிறித்துவ வழிபாடுகள் தமிழில் நடைபெறுவதற்கு முதல்படியாக அமைந்தன. அதோடு இவை வேதநாயகரின் தமிழ்ப் பற்றையும் காட்டுகின்றன. கிறித்துவ ஆலயங்களில் தமிழில் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உரைநடை:

          வேதநாயகர் வாழ்ந்த காலத்தைத் தமிழ் இலக்கிய வரலாற்றின் ஒரு புதிய தொடக்க காலம் எனலாம். இலக்கியம் கவிதை நடையிலிருந்து உரைநடைக்கு மாறிய வேளையாகும். கிறித்துவ சமய நெறிகளைப் பரப்புதற்குக் கிறித்துவத் திருத்தொண்டர்கள் உரைநடையைக் கையாண்டனர். அவர்கள் விவிலியத்தை தமிழில் மொழி பெயர்த்தனர். சமயப் பரப்பு நிலையில் உரைநடை ஆக்கம் வளர்ந்தது. அக்காலத்தில் வாழ்ந்த வேதநாயகர் தம் பார்வையை உரைநடையின்ச்ச்ச்பால் செலுத்தினார். கவிதையைவிட உரைநடையே மக்களிடம் எளிதில் சென்றடையக் கூடியது என்பதைக் கண்டார். பெண்கல்வி, பெண்மானம் முதலிய உரைநடை நூல்களைப் படைத்தார். உரைநடையின் வாயிலாக மக்களைத் திருத்த முடியும் என்று எண்ணினார்.

"வசன காவியங்களால் ஜனங்கள் திருந்த வேண்டுமேயல்லாது
செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்தியம் அல்லவா!
நம்முடைய சுய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமல்
இருக்கிற வரையில் இந்த தேசம் சரியான சீர்திருத்தம் அடையாது
என்பது நிச்சயம்' என்று கண்டார்."
(பிரதாப முதலியார் சரித்திரம்)


          நெடுங்கதைகள், காவியங்களாக இருந்த நிலையை மாற்றி, உரைநடையில் "பிரதாப முதலியார் சரித்திரம்," "சுகுண சுந்தரி" போன்ற நாவல்களைப் படைத்தார். ஒரு புதிய இலக்கிய முயற்சியின் முன்னோடியானார். இம்முயற்சி தமிழ் இலக்கிய வரலாற்றிலொரு திருப்பு முனையாகும்.

"தமிழில் இம்மாதிரி உரைநடை நவீனம் பொதுமக்களுக்கு இதுவரை அளிக்கப்படவில்லை. ஆகையால் இந்த நூல் வாசகர்களுக்கு ரசமாகவும், போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமைப்படுகிறேன்,"
என்று வேதநாயகரே பிரதாப முதலியார் சரித்திரத்தின் முன்னுரையில் குறிக்கிறார்.


இசைத்தமிழ்:

          நமது பண்டைத் தமிழிசையை மறந்தோம்; சீர்காழித் தமிழிசை மூவர்களான, முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாச்சலக் கவிராயர் ஆகியோரின் தமிழிசையை மறந்தோம். தெலுங்கு, வடமொழி சங்கீத மும்மூர்த்திகளான சியாமா சாஸ்திரி, தியாகையர், முத்துசாமி தீட்சதர் போன்றோரின் தமிழல்லாத இசைப்பாடல்களைப் பொருள் புரியாமலே போற்றி வந்தோம்.

          வேதநாயகர் கிறித்துவரே ஆனாலும் எல்லாச் சமயங்களையும் போற்றினார். எல்லா மறைகள் கூறும் உண்மையை ஏற்றார். சமயப் பொறை கண்டார். சமயப் பொதுமையை உணர்த்தவும், தமிழில் இசைப் பாடல்கள் இல்லை என்று சொல்லப்பட்டக் குறையை போக்கவும், "சர்வ சமய சமரசக் கீர்த்தனைகளையும்" பாடினார். தமிழிசைக்கு வளம் சேர்த்தார். தமிழிசை இயக்கத்திற்கும் சமயப் பொதுமைக்கும் முதன்மையராகத் திகழ்ந்தார்.


தமிழ் உணர்வு:

          நீதியரசர் வேதநாயகம் நீதிமன்றத்தில் தாய்மொழியாம் தமிழ் வழங்கப் பெறாததைக் கண்டு வருந்தினார்.

"தேச பாஷையும் தமிழ்! கோர்ட்டில் வழங்கப்படும் பாஷையும்
தமிழ்! நியாதிபதியும் தமிழர்! வாதிக்கின்ற வக்கீலும் தமிழர்!
மற்ற வக்கீல்கள், கட்சிக்காரர் முதலானவர்களும் தமிழர்களே!
இப்படியாக எல்லாம் தமிழ்மயமாய் இருக்க அந்த வக்கீல்கள்
யாருக்குப் பிரீதியார்த்தமாக இங்கிலீசில் வாதிக்கிறார்களோ
தெரியவில்லை"
. (பிரதாப முதலியார் சரித்திரம்)

என்று தம் பாத்திரத்தின் வாயிலாக உணர்ச்சி பொங்க கூறுகிறார். பிறதுறைகளிலும் தமிழ் புறக்கணிக்கப்படுவதைக் கண்டு கொதித்தார். நீதிமன்றம் மற்றும் எல்லாத்துறைகளிலும் தமிழே ஆட்சி மொழியாக மிளிர வேண்டுமென்று முதல் குரல் கொடுத்தார்.

          ஆங்கிலம் பயிற்று மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் ஆங்கிலேயர்களால் நுழைக்கப்பட்டது. தாய்மொழியாம் தமிழ் கற்காமலே அரசுப் பணியைப் பெறலாம், எத்துறைக்கும் செல்லலாம் என்ற நிலையிருந்தது. (இன்றும், நம்மவர் ஆளும் ஆட்சியிலும் இதே நிலை தானே!). இந்தச் சூழ்நிலையில் வேதநாயகர் பயிற்றுமொழியைத் தாய்மொழியில் கொணர வேண்டுமென்று முதல் குரல் எழுப்பினார். வேதநாயகர் தம் நூல்களின் வாயிலாகத் தமிழர்களுக்குத் தமிழ் உணர்வையும், தமிழ்ப்பற்றையும் ஊட்டிய தமிழர் என்னும் பெருமைக்குரியர்.

மொழிபெயர்ப்பு:

          வித்தகர் வேதநாயகம் நீதிமன்றம் தொடர்பான சட்டங்களைத் தமிழில் மொழி பெயர்த்தார். வழக்கறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் அதனை "சித்தாந்த சங்கிரகம்" என்னும் பெயரில் வெளியிட்டார். நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து, தமிழில் தீர்ப்பாணைகள் வழங்குதற்கு வழிகாட்டினார். மொழிபெயர்ப்பின் வாயிலாகவும் உரைநடைத் தமிழை வளர்த்தார்; மொழிபெயர்ப்பிலும் முன்னோடியாக விளங்கினார்.

"இங்கிலீஷ் வார்த்தைகளுக்கு சரியான பிரதிபதங்கள் தமிழில் இல்லையென்று வக்கீல்கள் சொல்வது அவர்களுடைய தெரியாமையே அல்லாமல் உண்மையல்ல. தமிழ்நூல்களைத் தக்கபடி ஆராய்ந்தால், பிரதிபதங்கள் அகப்படுவது பிரயாசமா!". (பிரதாப முதலியார் சரித்திரம்)

என்று கேட்டு நம்மைச் சிந்திக்க வைக்கிறார். சட்டச் சொற்களுக்குக் கலைச் சொற்கள் உருவாக்கும் அரிய வழியையும் முதன்முதல் கூறியவர் வேதநாயகராவார்.

பெண்ணியம்:

          வேதநாயகரின் சமூகப்பணிகளில் தலையாயது அவர் மேற்கொண்ட பெண் கல்வியாகும். பெண்கள் கல்வி கற்றுச் சமூகத்தில் மேலோங்க வேண்டுமென்று வேணவா உற்றார். மயிலாடுதுறை பெண்கள் பள்ளியைத் தொடங்கிப் பெண்கல்விக்கு வழிவகுத்தார். இதுவே தமிழ்நாட்டில் பெண்களுக்காகத் தனியாகத் தொடங்கப்பட்ட முதல் பள்ளியாகும். அவர் வழியில் அவருடைய மாணவர் சவரிராயலு நாயகர் புதுவையில் பெண்களுக்கென்று தனிப் பள்ளியைத் தொடங்கினார். பின்னாளில் பாவேந்தரும், "இற்றைநாள் பெண்கல்வியாலே - முன்னேற வேண்டும் வையம் மேலே" என்று வழிமொழிந்து பாடியது குறிப்பிடத்தக்கது.

"இந்த தேசத்தில் பெண்களை அடிமைகளைப் போலவும் மிருகங்களைப் போலவும் நடத்துவது மிகவும் பரிதவிக்கத்தக்க விஷயமாயிருக்கிறது.". (பிரதாப முதலியார் சரித்திரம்)

"பெண்கள் தம் அடிமை நிலையிலிருந்து மாறி உரிமை பெறல் வேண்டும்; பெண்களுக்குப் பெண்களே இழைத்துக் கொள்ளும் கொடுமைகள் தவிர்க்கப்படல் வேண்டும். விருப்பமில்லாத பெண்ணுக்கு வலிந்து திருமணம் செய்வித்தல் கூடாது," என்றெல்லாம் பழைய வழக்கங்களை உடைத்துப் புதிய வழிகாட்டினார்.

"கலியாணமென்பது ஸ்திரி புருஷர்கள் இருவரும் சம்மதித்து செய்து
கொள்கிற பரஸ்பர நிபந்தனையே அல்லாது, ஒருவருடைய
சம்மதித்தின் பேரில் நடக்கிற காரியமல்ல"
. (சுகுண சுந்தரி)

எனும் கருத்தை பெண்களுக்கு முதன்முதல் உரிமையாக்கிப் பழைய வழக்கத்தை உடைத்தார். பெண்களுக்கு பெண்களே இழைத்துக் கொள்ளும் கொடுமைகளை இடித்துக் காட்டினார். தலைவி தன் கணவனின் ஓவியத்தைத் தவிர வேறு ஆணின் படத்தைப் பார்க்காதது போல், தன் கணவனும் வேறு மங்கையின் ஓவியத்தைப் பார்க்கச் சம்மதிக்க மாட்டாள் (நீதிநூல்) என்று காட்டி, கற்பு நிலைக்கு ஆண் பெண் இருவருக்கும் ஒரு பொது நிலை வகுத்துக் காட்டினார். இதனையே பின்னர்,

"கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்"
.
என்று பாரதி வழி மொழிந்தார்.
"அரசனாயிருந்தாலும், யாராயிருந்தாலும் ஒரு புருஷனுக்கு ஒரே
பாரியாயிருக்க வேண்டியது முறையே தவிர, ஒருவன் பல ஸ்திரீகளைச்
சேர்த்து வைத்துக் கொண்டிருப்பது சுபாய முறைக்கும் தர்ம
நீதிக்கும் முற்றிலும் விருத்தியாயிருக்கிறது"

. (சுகுண சுந்தரி)
என்று கூறி ஒருவனுக்கு ஒருத்தியெனும் இலட்சியத்தை இலட்சியம் செய்யாதிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலேயே முழங்கினார்.
          குழந்தை மணம் பெருவழக்காய் இருந்த நாளில் அதனை முழுமையாக எதிர்த்தார். சதியென்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒரு பெண்ணின் வாயிலாக மறுக்கச் செய்தார்.

"புருஷன் என்னோடு உடன்கட்டை ஏறச் சம்மதித்தால் தான்
நான் தாலி கட்டிக் கொள்வேன். அல்லாது போனால் தாலி கட்டிக்
கொள்ள மாட்டவே மாட்டேன். அவன் கட்டினாலும் அறித்து
எறிந்து விடுவேன்"
. (சுகுண சுந்தரி)
என்று மகள் ஒருத்தி புரட்சிக் குரல் எழுப்புவதாகக் காட்டினார். பெண் உடன்கட்டை ஏறும் கொடிய வழக்கத்தைக் கடிய இந்தப் புரட்சியை முதன்முதலாகச் செய்தவரும் வேதநாயகரே.

          பின்னாளில் பாரதி புதுமைப் பெண்களைப் படைக்கவும், பாவேந்தர் குடும்ப விளக்கினை ஏற்றவும் வேதநாயகர் முன்னோடியாக விளங்கினார் எனலாம். இளங்கோவடிகளுக்குப் பிறகு, பெண்ணை உயர்த்திக் காட்டிய பெருமை வேதநாயகருக்கே உரியதாகும். இப்படிப் பெண்மைக்குப் பலநிலைகளில் குரல் கொடுத்த வேதநாயகர் பெண்ணியச் சிந்தனையின் முன்னோடியெனலாம்.

கல்வியும் நலத்திட்டங்களும்:

          ஆங்கிலேயர்கள் புகுத்திய, எழுத்தர்களை உருவாக்கும் கல்விமுறைக்கு மாற்று முறைகளை அப்போதே சிந்தித்தவர் வேதநாயகர். இலக்கணம், இலக்கியம், அறிவியல் பயிற்ற வேண்டும்; ஒழுக்க நெறியை ஓத வேண்டும்; தொழிற்கல்வி, கலைக்கல்வி மற்றும் வாழ்க்கை நெறிக் கல்வி அளிக்க வேண்டும்; கல்வி யாவர்க்கும் கிட்டிட இலவசக் கல்வித் திட்டத்தைச் செயலாக்க வேண்டும்; என்றெல்லாம் அன்றே புதிய கல்விச் சிந்தனைகளை வகுத்து நல்ல வழிகாட்டுதல்களை உணர்த்தினார். சமூகத்தில் நலிவுற்ற மக்களுக்கும், உழைக்க முடியாதோர்க்கும் ஊனமுற்றோர்க்கும், நோயுற்றோர்க்கும், முதியோர்க்கும், பெண்டிர்க்கும், மறுவாழ்வில்லம், முதியோரில்லம், மருத்துவமனை போன்ற சமூகத் திட்டங்களை அன்றே உணர்த்தினார்.

          சிறந்த அறிஞர், கவிஞர், தொழிலாளர் முதலியோர்க்குப் பாராட்டும், அவர்கள் கவலையற்று வாழ்வதற்கு உதவித் தொகையும் வழங்க வேண்டுமென்று அப்போதே உணர்ந்து சொன்னார். நல்ல ஆட்சிமுறைக்கான பல சிந்தனைகளைத் தம் படைப்புகள் வாயிலாக உணர்த்தினார். தம் நாவல்களில் மூலமும், தாம் படைத்த பாத்திரங்கள் வழியாகவும் அரசியலையும், ஆட்சி முறையையும், சமூகத்தின் பல்வேறு நிலைகளையும் எடுத்துக் காட்டிய முதல் மறுமலர்ச்சி எழுத்தாளராக வேதநாயகர் விளங்குகிறார். சமுதாயத்தில் மலிந்து கிடந்த மூட நம்பிக்கைகளையும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத வழக்கங்களையும் நாடினார். நல்ல குடும்பங்கள் மூலம் நல்ல சமுதாயம் கான விழைந்தார். இப்படி ஒவ்வொரு நிலையிலும் புதிய சிந்தனைக்கும், புதிய போக்கிற்கும் பாதையமைத்த முன்னோடி வேதநாயகராவார்.

நிறைவுரை:

          வேதநாயகர் நீதியரசர் பதவியில் அமர்ந்த முதல் தமிழர், இந்தியர்; அவர் முதல் நாவலாசிரியர்; முதல் மறுமலர்ச்சிக் கவிஞர்; பெண்ணியத்திற்குக் குரல் கொடுத்த முதல் மறுமலர்ச்சி எழுத்தாளர்; தமிழில் வழிபாடு நடைபெற முதல் படி அமைத்தவர்; இந்நாள் தமிழிசைக்கு முன்னவர்; உரைநடைக்கு வளம் சேர்த்த முன்னோடி; மொழிபெயர்ப்புத் தந்தை; கலைச் சொல்லாக்க முனைவர்; தமிழ் ஆட்சிமொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி, கல்வி மொழி ஆவதற்கு முதன் முதல் குரல் கொடுத்தவர்; ஆட்சிமுறையையும் நலத்திட்டங்களையும், தாம் படைத்த எழுத்துகள் மூலமும் பாத்திரங்கள் வழியாகவும் உணர்த்திய முதல் ஆட்சிமுறைச் சிந்தனையாளர். சமூகச் சீர்திருத்தம், பகுத்தறிவு, பொதுமை உணர்வு, மனிதநேயம் முதலான எண்ணங்களைத் தோற்றுவித்ததிலும் முதன்மை பெறுகிறார் வேதநாயகர்.

          இப்படி எல்லா நிலைகளிலும் வேதநாயகர் முதன்மையராக விளங்கி எதிலும் முதன்மையெனும் ஏந்தலாக சிறப்புறுகிறார்.


-:0:0:0:-