புதுவைக் கவிதைகள்



விதைத்து வைத்தேன்; ஒருநாள் விதை முளைத்தது
எழுதி வைத்தேன்; ஒருநாள் கவிதை பிறந்தது!

தடம் பதிப்போம்

கட்டுக்கள் பிணைப்புக்கள் கவலை யாவும்
     கட்டறுத்து விட்டொழித்து நிமிர்ந்து நின்று
சிட்டைப்போல் சிறகிரண்டை விரித்து விட்டுச்
     சிலிர்ப்பூட்டும் மென்காற்றைத் தழுவிக் கொண்டு
வெட்டவெளி தனிலெங்கும் பறந்தி ருப்போம்!
     விடுதலையாம் அமுதூற்றைத் திறந்து விட்டு
மட்டில்லாப் பேரின்பம் நுகர்ந்தி ருப்போம்!
     மயக்கங்கள் விட்டொழித்து விழித்து நிற்போம்!

காற்றைப்போல் களைப்பறியாக் கால்கள் கொண்டு
     கவினுலகம் முழுவதுமேக் கடுகிச் சொல்வோம்!
ஊற்றைப்போல் சுரப்பெடுக்கு(ம்) உள்ளு ணர்வில்
     ஓயாமல் சலியாமல் உயிர்த்தி ருப்போம்!
சோற்றுக்குங் கந்தைக்கும் குனிந்து நைந்து
     கொடும்பிணியின் வாய்வீழ்ந்து முடிவி(ல்) ஓர்நாள்
கூற்றுக்கே இரையாகுங் கோணல் வாழ்வின்
     கூனலையும் சரிசெய்து நிமிர்த்தி வைப்போம்!

கைவிலங்கு கால்விலங்கை அறுத்துப் போட்டு
     கைகொட்டி யார்ப்பரித்துக் களித்துப் பாடிப்
பொய்விலக அகத்தினிலே புழுத்தி ருக்கும்
     புல்லியக்கீழ்க் குணமனைத்தும் விலக, நெஞ்சில்
மெய்துலங்கும் வண்ணமதாய் வாழ்ந்தி ருப்போம்!
     மேவுகின்ற துயரனைத்தும் வரவு வைப்போம்!
பைகுலுங்கப் பொருள்சேர்த்துப் புவியேப் போற்றும்
     பைந்தமிழின் சுவைபோன்றும் வாழ்ந்தி ருப்போம்!

அடிமைகொளு(ம்) உணர்வுகளை ஆட்டி வைப்போம்!
     அழுதழுது தேம்புவதை நிறுத்தி வைப்போம்!
மிடிமைகொளும் இருட்பேயை விரட்டி விட்டு
     மிளிர்கின்ற மணிக்குன்றாய் ஒளிர்ந்தி ருப்போம்!
செடிகொடிகள் புள்ளினங்கள் விலங்கு தம்மின்
     சிந்தைகவர் அழகினிலே களித்தி ருப்போம்!
வடிகின்ற ஒளிப்புனலில் மூழ்கி மூழ்கி
     வையத்தில் அழகெங்கும் துலங்க வைப்போம்!

மனிதவுடல் பெற்றுவந்த போது(ம்) இந்த
     மனிதரிடை மனிதனென வாழ்ந்த போதும்
கனிகுலுங்கும் பயன்மரமாய்க் கொடியிற் பூத்துக்
     கமழ்கின்ற மென்மலராய்க் குளிர்ந்த பட்டைப்
பனிபடர்ந்த புல்வெளியாய்ப் படைப்பி(ல்) எங்கும்
     படர்ந்திருக்கும் நுண்ணுயிராய் வாழ்ந்து பார்ப்போம்!
பிணிமூப்புச் சாக்காடு பீழை மற்றும்
     பிறப்பிறப்பு வலையறுத்து விண்ணைக் காண்போம்!

செக்கிழுக்கும் மாட்டைப்போல் தேய்ந்த பாட்டை
     செல்வதிலே நாளெல்லாம் கழித்து விட்டுத்
தக்கைகளாய்த் தன்னுணர்வே யின்றிக் காய்ந்த
     தடுக்குகளாய் வாழ்ந்திருக்க ஒப்ப மாட்டோம்!
பொக்கெனவே உதிர்ந்துவிடும் இந்த வாழ்வில்
     பொன்றாத மணம்பரப்பி வாழும் வண்ணம்
எக்கணமும் பூத்திருபோம்; புகழ் சேர்ப்போம்
     இப்புவியில் நம்தடத்தைப் பதித்து வைப்போம்!



கவிஞர் காசி வில்லவன்,
புதுசேரி