வீர வரிகள்!
ஐம்புலக் குதிரையை அடக்கப் பயின்று
ஆன்ம வெளியின் ஆனந்தக் கடலில்
மூழ்கித் திளைத்து முற்று முணர்ந்து
மெய்ப்பொருள் உணர்த்திய மெய்களிக் கூத்து!
கந்தலைப் போர்த்திக் கஞ்சிக்கு வாடி
அடிமைப் குளிரில் அல்லும் பகலும்
பல்கிடு கிடுக்கப் பதுங்கிய மாந்தரை
விழிப்புச் சூட்டினால் வெளியே கொணர
நெருப்பு இழைகளால் நெய்த போர்வை!
அன்பில் முகிழ்க்கும் ஆக்க புரட்சியை
அவனிக் குணர்த்திய ஆத்திச் சூடி!
அகவிடு தலையின் அடிப்படை இலக்கணம்
எடுத்துக் காட்டிய இலக்கணக் கொத்து!
வழிவை வந்த குருட்டுத் தனமெனும்
குட்டையில் அழுந்திக் குறுகிய மாந்தரைத்
தலைநிமிர வைத்த தண்டமிழ்ப் புதுப்புனல்!
சிக்குப் பிடித்த தமிழனின் தலைக்கு
எண்ணெய் தடவி எழிலுறச் சீவித்
தழைய வைத்த தந்தச் சீப்பு!
பண்டிதர் வீட்டில் பதுங்கிக் கிடந்த
பைந்தமிழ்ப் பெண்ணைப் பாரே ஏத்தும்
புதுமைப் பெண்ணாய் புதுக்கிய பூமழை!
உழைப்பால் உலகம் உயர்ந்து சிறக்கவும்
தொழில்வளம் கண்டு தொல்புகழ் மீட்கவும்
எவர்க்குங் கல்வி எவர்க்குஞ் சோறு
எங்கும் எவர்க்கு மேற்ற உழைப்பு!
உழைப்பே இன்றி ஊரைச் சுற்றி
உண்டு கொழுத்து உலகை ஏய்க்கும்
எத்தர் தம்மை எலியின் பிழுக்கையாய்
மிதித்து நசுக்கி மேதினி காத்தல்
சாதிப் புழுக்களின் சாணித் திரளையாய்
வாழ்பவர் தம்மை வாரி எடுத்துப்
புதைகுழி தோண்டிப் புதைத்துப் போடல்!
இப்படிப் பற்பல இனிய கொள்கைகள்
வகையாய் நமக்கு வகுத்துத் தந்த
வீரவரிகள்; விறல்மிகு தோள்கள்!
இத்தனை புகழ்க்கு மேற்ற கவிஞன்
பார்புகழ் படைத்த பாரதி தானே!
அச்செடுக்க
கவிஞர் காசி வில்லவன்,
புதுசேரி