ஆழிப் பேரலை

புதுக்கவிதை


ஆழிபேரலை வரலாறு மாற்ற வல்லது;
அகழ்வாராய்ச்சி நிரூபித்தது!
ஆழிபேரலை புவிவடிவை மாற்ற வல்லது;
அறிவியலாராய்ச்சி நிரூபித்தது!

எதிர் பார்த்து வருவது இயற்கையில் மரணம்;
எதிர் பாராது வந்தது இயற்கையால் மரணம்!

கும்பகோணத்திலும் குழந்தைகள், கொந்தளித்த
கடற் கோளிலும் குழந்தைகள்;
குழந்தைகள் மீதான உன் பிரியத்தை,
காண்பித்த முறை சரிதானா இறைவா?

கால் நனைத்து திரும்பி போகும் அலைகள்,
கால் பிடித்து இழுத்து போகும் என்று,
கபடமற்ற பிள்ளைகள் அய்யகோ அறியவில்லை!

பிள்ளைகள் மகிழ்ந்து குலாவும்போது பொங்கி வந்த கடலே!
பிணத்தின் மீதிருந்த பணம்நகை பிடுங்கபடும் போதும்,
பழுதடைந்த வீட்டிலிருந்த பொருட்கள் திருடப்படும் போதும்,
பொறுமை காத்தது முறையா?

நிரபராதியை கொல்வது சட்டப் பண்பில்லை;
நிராயுதபாணியை கொல்வது யுத்த பண்பில்லை;
நம்பியோரை கொல்வது நல்ல பண்பில்லை;
நீலக்கடலே நீ, நீளம் தாண்டியது நயவஞ்சகமன்றி வேறில்லை!

என் வீட்டில் பிணம் விழுந்தால் எதிர் வீட்டினர் ஆறுதல்;
எல்லோர் வீட்டிலும் எஞ்சியிருப்பது பிணமெனில்,
எவருக்கு எவர் ஆறுதல்?

அடையாளம் சொல்லக்கூட ஆளில்லாத குடும்பத்தில்,
அளிக்கபடும் நிதியுதவி அரசிலாக்கப் படுவது
வேதனையா? வேடிக்கையா?

சமுதாய சீர்கேடும் கலாச்சார முறைகேடும்
சங்கமிக்கும் இடம் கடற்கரை என்பதால் - அலையே
கறை துடைக்க கரை வந்தாயோ?

களையான மனிதரை விழுங்குவதை விட்டு
கலையான பிள்ளைகளை தின்றுவிட்டு
கறையாகி போனாயே!

ஆயிரம் அணுகுண்டு வீச்சைவிட கொடியது
ஆழிபேரலையின் கோர தாண்டவமிது!
அழிவின்மூலம் வலிமை காட்டும் மனிதன்போல
ஆண்டவனும் மாறியது என்ன கொடுமையிது?



திரு காசி இராஜா
புதுச்சேரி