உயரே பறக்கும் காற்றாடி

புதுக்கவிதை


மரணமொரு விந்தை; மரணத்தை எல்லோரும்
ஏதோவொரு கணத்தில் சந்தித்திருப்போம்!
இதுதான் மரணமென்று உணருமுன்னே
கடந்து சென்றிருக்கும் அல்லது
காவு கொண்டிருக்கும்!

மரணத்தின் வாசல் சென்று மீண்டவர் சொல்வார்;
"உயிரென்பது உயரே பறக்கும் காற்றாடி;
நூலவிழும் நாளதனை கணித்திடவே முடியாது!
மரணத்தை கண்டோருண்டு; வென்றாரில்லை!"

உடலின் மீதிருக்கும் மண்ணும்
உடலி னுள்ளிருக்கு முயிரும்
உதிரும் நேரம்வந்த போதில்
ஒட்டி யிருக்கப்போவ தில்லை!

ஒவ்வொரு கடையாயோடி அலையும் நாய்
ஒன்றுமே வாங்காதது போல்
ஒவ்வொரு கல்லறையாய் கவ்வியிழுத்தும் ஓநாய்
ஒன்றுமே தேறாதது போல்

எங்கெங்கோ சுற்றிவந்து எதையெதையோ சேர்த்துவைத்து
என்ன கொண்டு போகிறோம் எழுந்து போகையில்;
எண்சாண் உடம்பில் எச்சிலும் எலும்பும்
ஏழாயிரம் நோயுந் தவிர!

காத்திடவும் வகையறியாமல் கைவிடவும் முடியாமல்
கவர்பிளந்த மரத்துளையில் இடையினிலே காலிடுக்கி
அகப்பட்ட பின்னே காலகற்ற வழியற்ற
ஆப்பதனை அசைத்திடும் ஆவேசக் குரங்கனைய
அல்லலது கொண்டிடுவோம் கால மெல்லாம்!

செத்தபின்னே மெய்கூட சொந்தமென எடுத்துச்
செல்லவழி யில்லா இறந்த காலத்தைப் பேசிப்பேசி
இன்றைய பொழுதைக் கழித்துவிட்டு
நாளைய இருளுக்கு பயந்து
நடக்கும் வாழ்வில் ஒளியேற்ற மறந்து
வேப்பெண்ணையி லூறிய வெள்ளைச் சர்க்கரைபோல்
சுவையினை உமிழ்ந்துவிட்டு சக்கையாய் சாகின்றோம்

இந்த நேரத்தில் இந்த மரத்திலிருந்து
எத்தனை இலைகள் எப்படி உதிருமென
எல்லாம் வல்ல இறைவன் கட்டளை; இதில்
அடுத்தவர் பார்வைக்காய் அரிதாரம் பூசி
அசல்முகம் தொலைக் கின்றோம்; ஆகையினால்

அவரவர் தேவைக்கு மீறியே சேர்க்காது
அடுத்தவரின் கையிருப்பை அனுமதியின்றி புணராது
இயல்பாய் இருப்பதே இனிமை!



திரு காசிராசா
புதுச்சேரி