கம்பரும் நகைச்சுவையும் - நகைச்சுவைக் கட்டுரை

மோ.சிரீ. செல்லம் - பி.ஒ.எல், எல்.டி

நன்றி - "கதாமணி"
கதாமணி பிரசுராலயம், சென்னை


          காவியம் என்றால் ஒன்பது சுவையும் நிறைந்திருப்பது என்றவோர் எண்ணம் எல்லோர் மனதிலும் தோன்றுகிறது. கம்பர் இயற்றிய ராம காதையாகிய காவியத்திலும் இவ்வொன்பது சுவைகளும் இடம் பெற்றிருக்க வேண்டுமே. அநேகமாக கம்ப இராமாயணத்தை பற்றிப் பேசுவோர் யாருமே முக்கியமாக அதில் நிறைந்து தோன்றும் வீரம், சோகம் என்ற சுவையைப் பற்றியே பேசுகின்றனர். கம்பரின் நகைச்சுவையைப் பற்றி அதிக ஆராய்ச்சி இருப்பதாகக் காணோம். இதனால் கம்பராமாயணத்தில் நகைச்சுவையேயில்லை என்று எண்ணி விடக் கூடாது. இருக்கிறது. ஆனால் ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும், வடமொழி நாடகங்களிலும் இருப்பது போன்ற விதூஷகன் என்ற பட்டப் பெயரை இது இங்கே நெற்றியில் எழுதி ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. இங்கொன்றும், அங்கொன்றுமாக ஒளிந்து கொண்டிருக்கிறது; புதையல் போல. ஏன் தெரியுமா? இது நாடகமல்லவே! காவியந்தானே! நாடகத்தில் தான் நகைச்சுவை பட்டவர்த்தனமாக இருக்கவேண்டும். காவியத்தில் ஒளிந்திருப்பதுதான் விசேஷம்.

          நகைச்சுவை அல்லது ஹாஸ்யம், உருவத்தில் நின்று தோன்றலாம், சொல்லில் நின்று தோன்றலாம், செயலில் நின்று தோன்றலாம், ஒரு சந்தர்ப்பத்தில் நின்றுந் தோன்றலாம். எல்லாவகை நகைச்சுவையும் கம்பராமாயணத்தில் இருக்கிறது. இது தாடகை வருணனை:

இடையின் சிறுமையை வருணிக்கிறார் கம்பர்.
"கடங்கலுழ் தங்களிறு கையொடுகை தெற்றா வங்கொள நுடங்குமிடையாள்"

          அவளுடைய இடை மிக நுடங்கியது - குறுகியது -என்கிறார் கம்பர். எவ்வளவு குறுகியது தெரியுமோ? இரண்டு பெரிய ஆண்யானைகள் தங்கள் துதிக்கைகளை இணைத்துக் கயிறுபோல் வளைத்துக் கொண்டாலும் வளைப்பதற்குச் சிரமமான அவ்வளவு நுடங்குமிடையாள் என்கிறார்.

இங்கே பாருங்கள் அந்தணர் வருணனையை:
"குடையர் குண்டிகை தூக்கினர் குந்திய
நடையர் நாசி புதைத்தகை நாற்றலர்
கடக ளிற்றையும் காரிகை யாரையும்
அடைய அஞ்சிய அந்தணர் ழந்தினார்"          ஒரு கையில் (கக்கதில்) குடை. அதே கையில் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டிருக்கும் ஒரு குண்டிகை. குந்தி குந்தி நடக்கும் நடை. மற்றொரு கையினால் மூக்கை மூடிக் கொண்டிருக்கிறார்கள். அக்கையை மூக்கிலிருந்து எடுப்பதேயில்லை; கீழே தொங்க விடுவதேயில்லை. மனதிலோ பயம். இரண்டு பொருட்களைக் கண்டு பயந்து நடுக்கி ஒதுங்கி ஒதுங்கிப் போகிறார்கள். ஒன்று நல்ல மதயானை. மற்றொன்று அழகிய பெண்கள். இக்காட்சி நிகழுமிடம் தசரதன் ராமன் மணத்திற்கு படை புடைசூழச் செல்லும் பாதை. கற்பனைக் கண்களால் இந்த உருவத்தையும் செயலையும் பாருங்கள். தானே நகை தோன்றும்.

இங்கே பாருங்கள் சிருங்காரத்தோடு கலந்த நகையொரு செயலில்:
"வார்கு லாழலை வைத்தகண் வாங்கிடப்
பேர்கி லாது பிறங்கு முகத்தினான்
தேர்கி லானெறி அந்தரில் சென்றொரு
மூரி மாமத யானையை முட்டினான்"


          இதுவும் தசரதனைச் சூழ்ந்து மிதிலைக்குச் செல்லும் கூட்டத்தில்தான் நடக்கிறது. ஓரிளைஞ்சன், காமுகன், ஒரு இளமங்கையின் கச்சணிந்த தனத்தினையே பார்த்த வண்ணம் நடக்கிறான். அவன் கண்ணை அங்கிருந்து வாங்குஞ் சித்தம்
(will) அவனுக்கில்லை. அதைப் பார்த்தபடியே, குருடனைப் போல் நடந்து சென்று, ஒரு பெரிய மதயானைமேற் போய் மோதிக்கொண்டான். சற்று கற்பனை செய்து பாருங்கள் இக்காட்சியை. இத்தகைய பல ஹாஸ்யத் துணுக்குகள் சிருங்காரதோடு கலந்து கலந்து நிறையக் காணலாம் இவர் வாக்கில்.

          கங்கைப் படலத்தில் ராமன் இலக்குவன் சீதை இவர்களைக் கண்டு அன்புப் பெருக்கினால் தன்னை முற்றிலுமிழந்த குகன் வாக்கு இது. சக்கரவர்த்தி திருமகனாகிய ராம பிரானுக்கு மிதிலையரசன் மகளாகிய ஜானகிக்கும் வேண்டிய போகப் பொருளெல்லாம் - மிக உயர்ந்த போகப் பொருள்களெல்லாம் தன்னிடம் இருப்பதாகவும் வந்து சுகமாக இருக்கும்படியும் அழைக்கும் கட்டமிது. அரண்மனை போகப் பொருட்களின் இயல்புகளையறியாத குகன் காட்டு போகப் பொருட்கள் மிக உயர்ந்தவையென்று கூறும் வஞ்சகமற்ற உரையில் நகையிருக்கிறது. ஆனால், இந்நகை பின்வரும் சந்தர்ப்பத்தில், தோன்றும் நகை போன்றாதாம். சிறு குழந்தையொன்று, மூன்று வயது, வெகு மும்முரமாக நம்மை விருந்துக்கழைக்கிறது. மணலே சோறு, சிறு கற்களே பதார்த்தங்கள். இவைகளால் வயிராற வாயார நமக்கு உணவளிப்பதாக கூறுகிறது. அப்போது தோன்றும் நகை போன்றதே இது.

"தோலுள துகில்போலும் சுவையுள தொடர்மஞ்சம்
போலுள பரண்வைகும் புரையுள களிவானின்
கானுள சிலைபூணும் கையுள கடிதோடும்
மேலுள பொருளேனும் விரைவொடு கொணர்வேமால்"


          நல்ல துணியாக, ஆடையாகப் பயன்பட - சீதைக்குக்கூட - தோல்கள் இருக்கின்றனவாம். ருசியாக பழவகைகளும், தேனும், உண்ணவும் பருகவும் கிடைக்குமாம். சிறந்த அஸ்மான கிரி மெத்தை போல பரண் இருக்கிறதாம். கையும் வில்லும் இருக்கின்றனவாம்; மேலே பறக்கும் எதை வேண்டுமானாலும் அடித்துக் கொடுக்க. சொல்லும் குகன் கேலியாகச் சொல்லவில்லை. ஆனால் கேட்கும் நமக்கு அவன் மும்முரமும் அறியாமையும் அன்பொடு கலந்த நகையை தருகிறது. சூர்ப்பனகை தன் பெருமையை ராமபிரானுக்கு எடுத்துக் கூறும் கட்டம் இது:

"பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்விழப் புரங்கள் செற்ற
சேவலோன் துணைவனான செங்கையோன் தங்கை திக்கின்
மாவெலாம் தொலைத்து வெள்ளி மலையெடுத் துலகழன்றும்
காவலோன் பின்னை காம வல்லியாம் கன்னி"


          சாட்சாத் பிரம்மாவினுடைய பிள்ளையினுடைய பிள்ளையின் மகள் நான். திரிபுர சம்ஹாரம் செய்த அந்தச் சிவனுக்கு நண்பனான குபேரனுடைய தங்கை நான். திசை யானைகளையெல்லாம் வென்று வெள்ளிமலையையேத் தூக்கி மூன்று உலகையும் தனியரசாட்சி செய்யும் ராவணனோடு பிறந்தவள் நான். காமவல்லி என்பது என் பெயர். இது "திவான் பகதூர்" அந்த முதலியாரின் பேத்தி; கே.ஸி.ஐ.இ. ஜஸ்டிஸ் கலாதரைய்யர் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் கனகசபைப் பிள்ளை மகள் என்பது போலில்லையா? தன் பெயர் காமவல்லி என்று சொல்லிக் கொள்வதில்தான் நகைச்சுவை உச்சத்தையடைகிறது. அவளுடைய இன்னொரு பாணத்தை இங்கு பாருங்கள்;

"எழுதருமேனி யாய்ஈண் டெய்திய தறிந்தி லாதேன்
முழதுணர் முனிவ ரேவல் செய்தொழின் முறையின் முற்றிப்
பழதரு பெண்மை யோடும் இளமையும் பயனின் றேகப்
பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும்" என்றாள்."


          அடடா! சித்திரத்தில் கூட எழுத முடியாத இவ்வளவு அழகு மிகுந்த நீ இன்கே வந்திருக்கும் விஷயம் எனக்குத் தெரியாமலல்லவா போய்விட்டது, இவ்வளவு நாள். இங்கே வாழும் கேவலம் ஞானக்கட்டைகளாகிய முனிவர்களுக்கு எவல் செய்து செய்து இவ்வளவு நாளாக என் பெண்மையும் இளமையும் வீணாகவல்லவோ போய் விட்டன. இதோ இனிமேல் தான் உன்னால் இவை பயன் பெற வேண்டும்", என்கிறாள். சிரிப்பு வரவில்லையா இந்த அமைப்பில்? பாதிக் கல்யாணம் ஆய்விட்டது; இராமன் சம்மதம் தானே பாக்கி; இவளுக்குப் பூர்ண சம்மதம் தான். இவ்வளவு விளம்பரத்தையும் காதாரக் கேட்டும் இவ்வளவு சாகசத்தையும் கண்ணாரக் கண்டும் அனுபவித்தும் பேசாமல் சிரித்துக் கொண்டு நின்ற இராமன் இப்பொழுது போடுகிறான் ஒரு போடு. "நீ நல்ல அழகிதான் அம்மா. ஆனால் உன்னை நான் மணந்து கொள்வது பரம்பரை வழக்கத்துக்கு விரோதமாயிற்றே அம்மா. நீ அந்தண மங்கை; நான் அரசனாயிற்றே!" என்றான் சாந்தமாக. போக்கிரித்தனத்தைப் பாருங்கள். இந்த பதிலிலில் எவ்வளவு சூதிருக்கிறது? நியாயமாக நான் மணமானவன் என்றல்லவா சொல்லியிருக்கவேண்டும்? அவன் அழகி தானாம். "சுந்தரீ" என்றழைக்கும் அர்த்தமென்ன? தனக்கும் அவளை மணக்க இஷ்டம்தானாம். ஆனால் குலம்தான் குறுக்கே நிற்கிறதாம். அடடா! என்ன குறும்பு! "சுந்தரீ! மரபிற் கொத்த தொன்மையின் துணிவிற் றன்றால் அந்தணர் பாவை நீயான் அரசரில் வந்தேன்" என்றான்.

          உடனே தர்க்கத்தை மாற்றி தானும் அரசர் பாவைதான் என்று சாதிக்கும் சூர்ப்பணகையின் வார்த்தை வேகத்திலெல்லாம் நகைச்சுருதி இருக்கத்தான் செய்கிறது. இப்படியெல்லாம் தர்க்கம் செய்து கொண்டே இருக்கும்போதுய் சீதை பர்ணசாலையிலிருந்து மெதுவாக வெளியே வந்து இராமபிரான் அருகே மறைந்து நிற்கிறாள். அந்த சீதை ஓர் அரக்கி என்று இராமனிடம் சூர்ப்பணகை கூறும் இச்செய்யுளில், "எங்கப்பா குதிருக்குள் இல்லை" என்பது போன்ற நகைச்சுவை ததும்புகிறது.
"வருமிவள் மாயம் வல்லள் வஞ்சனை அரக்கி நெஞ்சம்
தெரிவிலள் தேறும் தன்மை சீரியோய் செயலிற் றன்றால்
உருவிது மெய்ய தன்றால் ஊன்நுகர் வாழ்க்கை யாளை
வெருவினன் எய்தி டாமல் விலக்குதி வீர" என்றாள்.


          "அய்யையோ; உன் அருகே நிற்குமிவள் மாயாவி; வஞ்சகம் மிகுந்த அரக்கி; இவள் எதற்கு இங்கே வந்திருக்கிறாளோ தெரியவில்லையே! இந்த உருவம் உண்மை உருவமல்லவே! இவள் மாமிசம் தின்பவள் அல்லவா? எனக்கு பயமாய் இருக்கிறது. என்பக்கத்தில் வராமல் துரத்திவிடேன்." என்கிறாள் சூர்ப்பணகை.

          இனி யுத்தகாண்டத்தில் அங்கதன் தூதுப் படலத்திலொன்று. அங்கதனை "யாரென்று" இராவணன் கேட்கிறான். அதற்கு அங்கதன் சொல்லும் பதில் இது.:-

" இந்திரன் செம்மல் பண்டோர் இராவணன் என்பான் தன்னைச் சுந்தரத் தோள்க ளோடும் வாலிடைத் தூங்கச் சுற்றிச் சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன் தேவர் உண்ண மந்தரக் கிரியால் வேலை கலக்கினான் மைந்தன்" என்றான்.


          "நானா? இந்திரனுக்கு மகனாகிய வாலியென்று ஒருவன் இருந்தான். அவன் சிறுவயதில் யாரோ இராவணன் என்ற ஒருவனுடைய இருபது அழகிய தோள்களையும் தன் வாலால் சுற்றித் தூக்கிக் கொண்டு பல மலைகளை எல்லாம் தாண்டித் திரிந்தானாம். அவன் தான் மந்தர மலையைத் தன் வாலால் சுற்றிக் கடைந்து தேவர்களுக்கு அமுதம் எடுத்து வந்தவனாம். அவன் மகன் தான் நான்." என்றான். யாரோ இராவணனை என்று சொல்லும் போது அங்கதன் வாக்கில் நகைச்சுவை பதுங்கியிருக்கிறது. கேட்ட இராவணன் கூறும் பதிலிலும் ஒரளவு நகைச்சுவை இருக்கிறது. "அப்படியா! நீ வாலியின் மகனா அப்பா? அடடா என் பாக்கி யமே பாக்கியம்! வாலி என் உயிர் நண்பனல்லவா? எனக்கினிமேல் என்ன குறை: சீதையை மனைவியாகப் பெற்றேன். உன்னையும் மகனாகப் பெற்று விட்டேன்" என்கிறான். "சீதையைப் பெற்றேன் உன்னை சிறுவனும் ஆகப் பெற்றேன். ஏதெனக்கரிய தென்றான் இறுதிநூற் கெல்லை கண்டான்."

          கம்பர் ஹாஸ்யத்தின் முடியாய் நிற்கிறது பின்வரும் செய்யுள். இந்திரசித்தின் நாகபாசத்தால் கட்டுண்டது போல் பாசாங்கு செய்த அனுமன் இராவணன் முன்னிலையடைந்து பாசத்தை வீசி, நிற்கிறான். இராவணனும் அனுமனும் பேசிக்கொள்கிறார்கள். இராவணன், "நீ யார்" என்று அனுமனைக் கேட்கிறான். அனுமன், "நான் வாலியின் மகனாகிய அங்கதன் தூதுவன்" என்றான். உடனே இராவணன், ஆவலோடு, "அப்படியா, வாலி சேய் விடுத்த தூத! வன்றிற லாய வாலி வலியன் கொல்? ஆசில்வாழ்க்கை, நன்று கொல்?" என்று வாலியின் நலத்தை விசாரிக்கிறான். அதற்கு அனுமன் கூறும் பதிலிது.

"அஞ்சலை அரக்க பார்விட் டந்தரம் அடைந்தா னன்றே வெஞ்சின வாலி மீளான் வாலும்போய் விளிந்த தன்றே"


          "பயப்படாதே இராவணா. வாலி இவ்வுலகை விட்டே மாண்டு போய் விட்டான். அவன் இனிமேல் திரும்பி வரவே மாட்டான். பயப்படாதே; அவன் வாலு போய் அழிந்து விட்டதையா. இனி மேல் வராது.." இந்த வாலும் போய் விளிந்த தன்றே என்பதில்தான் எவ்வளவு ஹாஸ்யம். இவ்வாறாக கம்பர் தம் இராமாயணத்தில் ஆங்காங்கு நகைச்சுவையை ஒளித்தொளித்து வைத்திருக்கிறார். வண்டு தேன் ஆராய்வதுபோல ஒவ்வொரு பாட்டாக ஆராய்ந்து கொண்டே வந்தால் சில பாடல்களில் நகைச்சுவைத் தேன் கிடைக்கும்.