ஏரிகளில் நீர் சேமிப்பும் விழிப்புணர்வும்!
நிலைமண்டில ஆசிரியப்பா
நீரிலா உலகின் நிலைமையை உணரின்
வேரிலா மரமாய் வீழ்ந்திடும் உலகம்!
பசும்புல் கூட பைந்தலைக் காட்டா!
விசும்பு நீரை வழங்கா தாகில்,
தானமும் தவமும் தவறிப் போகும்!
மானமும் அறிவும் மங்கிப் போகும்!
பசியும் வறுமையும் பண்பொடு ஒழுக்கமும்
நசிந்து போகும்! நம்கட வுளுக்கும்,
சிறப்பொடு பூசைகள் செய்வதும் ஒடுங்கும்!
வறண்டிடும் கடலும்! வள்ளுவம் கூறும்
நீரின் மதிப்பை நினைவிற் கொண்டு
சீராய் நீரைச் சேமித் திடுவோம்!
மரங்கள் வளர்த்து மாமழை பெறுவோம்!
பொறுப்புடன் நீர்நிலை போற்றிக் காத்திட
ஏரிகள் குளங்களின் கரையை உயர்த்தித்
தூரெடுத் துழவினால் துன்பம் போக்குவமே!
அச்செடுக்க
புலவர் செ. இராமலிங்கன்
புதுச்சேரி
|