மனிதம் காப்போம்
எண்சீர் விருத்தம்
சமுதாயச் சிக்கலுக்கு விலங்கு சாதி;
சந்தர்ப்ப வாதிக்கு விலங்கு நேர்மை;
குமுகாய முன்னேற்ற மடைவ தற்குக்
கொத்தடிமை போல்வாழ்தல் தீங்கே யாகும்!
அமுதாகச் செந்தமிழும் இருக்கும் போதில்,
அதைவிடுத்துப் பிறமொழியைப் பேணல் தீதே!
தமிழுக்கு விலங்கிட்டுத் தமிங்கி லத்தை,
தழுவுவதும் அழகாமோ தமிழ னுக்கு?
அடிமையெனும் விலங்கறுத்து வெற்றி பெற்றும்,
ஆங்கிலத்தின் விலங்குநமை அடிமைப் பூட்டால்
குடிவிளங்கச் செய்யாமல் அழிக்கு தய்யோ!
கொள்கையின்றி நம்தலைவர்கள் எதிலும் எங்கும்,
பிடிவாதம் கொள்கின்றார்! ஆங்கி லத்தை,
படிப்பறியாப் பாமரனும் கலந்து பேசி,
இடித்துரைப்பார் இருந்துமிங்கே அறிவே இன்றி
இழிப்போர்க்கு விலங்கிடுவோம்! தமிழைக் காப்போம்!
விடுதலையே விலங்காகிப் போன திந்நாள்!
வினைவ்லியால் வன்முறையால் அடிமை யாக்கிக்
கெடுதலையே செய்கின்றார் மக்களுக்குக்
கேட்பதற்கும் ஆளில்லை! துணிச்ச லில்லை!
எடுப்போனே வாழ்கின்றான்! தீமை செய்யும்,
இழிவுடையோன் மகிழ்கின்றான்! எண்ணிப் பார்த்தால்,
விடுதலைநாம் பெறவில்லை என்றே தோன்றும்;
விலங்கொடித்து வென்றிடுவோம்! மனிதம் காப்போம்!
அச்செடுக்க
புலவர் செ. இராமலிங்கன்
புதுச்சேரி
|