வழி கண்டிடுவோம் வாழ்ந்து சிறக்கவே!

நிலை மண்டில ஆசிரியப்பா


பண்டைய நாளில் பாரி லெங்கும்
மண்ணில் தோன்றிய மக்க ளெல்லாம்
அன்புடன் அறமும் ஆருயி ரொழுக்கமும்
பண்புடன் போற்றிப் பாருக் குரைத்தனர்!

உலக நாடுக ளுயர்ந்து விளங்கின!
நிலவின வெங்கும் நேர்மையுந் தூய்மையும்;
பல்லோர் போற்றும் நல்லோ ரெல்லாம்
கல்விகற் பிக்கக் கடுகியே உழைத்தனர்!

நீர்நிலம் வானொலி நெடுந்தீ காற்றும்
சீர்கே டின்றிச் செழுமையைத் தந்தன!
காலங் கருதியே கடமையைச் செய்ததால்
ஞாலம் முழுமையும் நலம்பெற லாயின!

"யாது மூரே யாவருங் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா"
எனும்கணி யன்பூங் குன்றனார் போன்றோர்
தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளராய்

வாழ்ந்த மண்ணில் மக்கள் வாழ்க்கை
வீழ்த்தப் பட்டு வீழ்ந்து கிடக்கிற(து)!
எங்கு மெதிலும் ஏற்றத் தாழ்வுகள்
சங்க மமைத்துச் சாதிகள் வளர்வதால்

அங்கிங் கெனாம லெங்கும் பரந்து
குங்குமம் பூவைக் கோதைய ரிழந்திடும்
கொலைவெறிச் சாதிச் சண்டையால் மனிதம்
நிலைத்திடா தழிகிறது விடியலே இன்றி!

உலக மெங்கு முண்மை மறைந்து
திலக மாகத் தீயவை நிறைந்து
பழிதீர்த் திடவே பக்தியின் பெயரால்
இழிச்செயல் புரிந்திடு மீனமு மொழியுமோ?

அறமன் றங்களும் அறமிலாப் பாதையில்
மறமன் றங்களாய் மாறிடுஞ் சூழலில்
அங்கிங் கெனாமல் எங்கும் போரிடச்
செங்குருதி சிந்திடுஞ் செயலும் மாறுமோ?

வோசோன் படலமு மோட்டை விழுந்து
மாசும் தூசும் மண்டிய தாலே
இயற்கை வளத்தை இனிதே காத்திடச்
செயற்கை முறையில் மாற்றந் தேவையே!

உலக அளவி லெங்கு மெதிலு(ம்)
உலவி வருவ தூழல், இலஞ்சம்
கொள்ளை, கொலைகற் பழிப்பு வானி(ல்)
எல்லை யிலாத இரசா யனப்புகை

இவையெலாம் அங்கிங் கெனாத படியே
புவியெலாம் பரவிப் பூதமாய் உலகை
அழிவுப் பாதையி லழைப்பதைத் தடுக்க
வழிகண் டிடுவோம்; வாழ்ந்து சிறக்கவே!



புலவர் செ. இராமலிங்கன்
புதுச்சேரி