எழுச்சியை ஊட்டிடு!

தனிப்பாடல்


அழகு மயிலே அன்பி னூற்றே!
பழகும் பண்பில் பைந்தமிழ்ச் சோலையே!
என்ற சொற்களில் ஏமாறும்
பெண்கள் நடுவில் பீடுகொள் பெண்ணே!

காதல் சொற்களால் கருத்தைக் கவர்ந்து!
நோதல் செய்து சாதலைக் காட்டும்
பேராண் மையிலால்ப் பேடியர்
சீரிலாப் போக்கைச் சிதறடிப் பவளே!

உன்னை நன்றா யுணர்ந்துகொள் உறுதியாய்
மண்ணுக் கொப்பாய் மாண்புகள் கொண்ட
பெண்ணிற் சிறந்தவர் யாருளர்!
என்பதை ஊருக் குணர்த்திடு பெண்ணே!

உன்னால் முடியாத துலகிலு முண்டோ!
விண்ணைத் தொட்டு விந்தைகள் செய்வாய்!
மண்ணிலும் மாப்புகழ் எய்திடும்
பெண்ணே! உன்றன் பெருமையைப் போற்றிடு!

குடும்ப விளக்காய் கோபுரச் சிறப்பாய்
இடும்பை வரினும் இனிய வாழ்வை
யீந்துவக்கு மியல்புடை யவளே!
ஏந்திய கொள்கையால் எழுச்சியை ஊட்டிடு!புலவர் செ. இராமலிங்கன்
புதுச்சேரி