நிலவுக்கும் கதிர்கள் உண்டு
அறுசீர் விருத்தம்
முள்ளெனக் கதிரும் தைக்கும்
முற்பகல் கழிந்த பின்னே!
வெள்ளிய அலைகள் துள்ள
விண்மிசை அழகி னாட்சி
உள்ளுறை மயக்கம் விட்டு
உற்பதம் புரிவா யென்றே
அள்ளிய மனிதர் நெஞ்சில்
அச்சமுங் கலந்தது பொய்யா!
தண்மதி யுனது தன்மை
தங்கிய மகளிர் வாழ்வில்
மண்டிடுந் துயரை நீக்க
மண்ணிடை யுரிமை உண்டு!
பெண்களைத் தடியர் தீண்ட
பித்தெனத் திரியும் போக்கு
கண்மணி யுனக்குப் பற்கள்
கைவிரல் நகமு முண்டு
அண்டிய உனது கற்பை
அள்ளிட நடிப்பார் பெண்ணே!
பண்டுநம் தமிழர் பாட்டை
பற்றிடும் படியாய்க் கற்பே
வண்டுக ளுணவைத் தேடி
வாழ்ந்திடப் பறக்கும் பாராய்
எண்டிசை கணினி காட்டும்
எங்கினும் பறக்கத் தோதாய்
கூட்டிடு விழியிற் தீயை
கொண்டிடு கலையில் வீரம்
போட்டிடுந் துணியிற் தூண்டல்
பொன்மக ளுனக்கு வேண்டாம்!
வீட்டினு ளிருந்தார் பெண்கள்
விண்மிசைப் பறந்தார் மின்ன
தீட்டிடுந் தெளிவை யுன்னில்
தென்மகள் உனக்குப் பூச்சேன்!
பாவலர் திருமதி மணிமேகலை குப்புசாமி
புதுச்சேரி
|