மலருக்குத் தென்றல் பகையானால்
நான்
திராவிட சிசு...
ஆரியங்களோடு அந்நியப்பட்டுப் போகிறேன்!
அவளுடனும் கூட...
இது
ஐந்து வருடத்திற்கான
அக்ரிமெண்ட் காதல்!
ஒருதலைக் காதலோடு உலவும் இராமனாய் நான்.
என்றோ பெய்த மழையின் எச்சங்கள், என் கண்களில் துளிர்ப்பதுண்டு.
பனித்துளி மாநாடுகள் மையம் கொள்வதுண்டு.
அதைப்பற்றி அவளுக்குக் கவலையில்லை!
நான்
அசோக வனத்து இராமன்!
சீதை
இலங்காபுரியின் பட்டத்து இளவரசி
இன்றுபோய் நாளை வா!
சொன்னவள் சீதை
மனுக்கள் நிராகரிக்கப் பட்டதால்
நிராயுதபாணியாய் இராமன் நான்!
எனது
நாளைகள் யுத்தங்களோடு தொடங்குகின்றன
மோதலுக்குப் பிறகுதானாமே காதல்?
ஒரு "நாளை"
இப்படியும் விடியலாம் என்ற
நம்பிக்கையில் நான்!
இருந்தாலும்
என்னிதயத்தின் கடைசித் துடிப்பு
ஏதேதோ சொல்கிறது;
எங்களுக்குள் உறவேற்பட வழியே இல்லையாம்;
ஏனெனில்
இது காதல் களமல்ல
தேர்தல் களம்!
அச்செடுக்க
கவிஞர் மனோ. மோகன்
தமிழ் இரண்டாமாண்டு
புதுவைப் பல்கலைக் கழகம்
|