தனிப் பாடல்
நிலவுக்கும் கதிர்கள் உண்டு
உலகப் பார்வையில் உண்மையின் நிறமென
கலகம் கலக்கம் கறைகள் நீங்கிய
திலகம் போன்றதாய்த் தெளிவான் மகட்கு
நிலவும் மதிக்கும் நிறைகதி ருண்டு!
பகலவ னொளியின் படுகதிர் வாங்கிச்
சுகந்தருஞ் சந்திரன் சூத்திர மறியோம்!
அகலமாய் விரிந்தெதிர் அலைகளைத் தருங்கடல்
தகவெழில் நிலவினால் தன்மையும் மாறுமே!
ஆழமா யகலமா யகழ்தலைப் பொறுத்ததால்
கோழையோ நிலமென குவலயம் நினைத்திட
வேழமாய்ச் சீறியே வெந்தழல் வெளிவரும்
சூழ்ந்திட எரிமலைக் கதிரெனப் பெயர்பெறும்!
மதிமுகம் மண்பொறை மதுத்தமிழ் புலவர்கள்
விதிபல பெண்களுக் கிழைத்தனர் அவர்க்குளே
கதிர்களூம் பலவுள கனிவொடு கடுமையும்
விதைத்திடுஞ் செயல்வழி வீணரைப் பொறுத்ததே!
தாய்மை யென்பது தன்னலங் கருதாது
சேய்மை நலத்தின் சிறப்பை நாடிடும்
தூய்மை உளமதில் தொண்டுகள் கதிர்களாய்
வாய்மை குறையா வளந்தர வீணரைப் பொறுத்ததே!
சிட்டாகப் பறக்கின்ற சிறுபறவை அருகழைத்து
திட்டாகத் தானியத்தை தினமீந்து மகிழ்கின்ற
முட்டாசுக் கவிபோல பலகவிஞர் உளத்துள்ளே
பட்டாசுக் கவியாக்கும் புரட்சித்தீ தானுண்டு!
தணிவென நிழல்தரு தலைநிமிர் மரங்களும்
பணிவுடை கிளைகளால் இலைகளால் மழைவரும்
அணிபல நிறைமரக் கதிர்களும் உயிர்களின்
பிணிகளை நீக்கிடும் பெருமையைச் சேர்த்திடும்!
சற்றுமோர் குறைவின்றி சலசலப் பேதுமின்றி
வெற்றுடல் தனில்புகுந்து வேதனை தந்திடும்
புற்றுநோய் போல்பல நோய்க்கதிர் மனிதனின்
கற்றபல் செயலழியக் கண்மூட மாய்த்திடும்!
அழுகின்ற பிள்ளைக்கு மேதொவோர் ஆற்றலுண்டு;
முழுநிலாப் பாக்குழுவின் முனைப்புக்குந் தேற்றமுண்டு!
எழுகதி ரியல்போடு இளம்பிறையின் குளிரோடு
பழுதிலாச் செயல்தனை பண்புடன் தருங்கதிரே!
நிலவே உனக்கும் கதிருண்டு; உனையொத்த
மலரின் மகளாம் மங்கைக்கு(ம்) அதுவுண்டு!
இருமன மொத்திடக் காதல் கதிர்களாய்;
திருமணம் நடந்திடத் தாரக் கதிர்களாய்;
மழலை யீன்றிடத் தாய்மைக் கதிர்களாய்;
விழைந்துடல் சுகந்தரக் காமக் கதிர்களாய்;
உடன்பிறந் தவர்நலப் பாசக் கதிர்களாய்;
உடனிருந் துதவிடும் நட்புக் கதிர்களாய்;
உலகிலே உண்மை உருவமா யொளிர்வதால்
நிலவே உனைப்போல் பெண்மைக்கும் கதிருண்டு!
அச்செடுக்க
கவிஞர் ந. இராமமூர்த்தி,
புதுச்சேரி
|