புதுச்சேரியில் உலக மகளிர் நாள் நிகழ்வுகள்

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை

                    நிகழ்கின்ற 2005ஆம் ஆண்டு உலக மகளிர் ஆண்டாக அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சுத் திங்கள் எட்டாம் நாள் உலகம் முழுதும் மகளிர் நாளாகவும் கொண்டாடவும் முடிவெடுக்கப் பட்டுள்ளது! புதுச்சேரியில், மார்ச்சு எட்டாம் நாள் (செவ்வாய்க் கிழமை) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பாக, புதுவை செயராம் திருமண நிலையத்தில், உலக மகளிர் நாள் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவ்வமயம் புதுவையின் மேதகு துணைநிலை ஆளுநர் திரு எம்.எம்.லகேரா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்ற, புதுவையின் முதலமைச்சர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்கள் சீரிய தலைமையேற்க, மேதகு ஆளுநரின் துணைவியார் திருமதி புஷ்பா லகேரா அவர்கள், பெண்கள் மேம்பாட்டிற்காக சீர்மையாக செயலாற்றும் மகளிர் தன்னார்வ அமைப்புகளுக்கு பணப் பரிசுகள் வழங்கி பெருமைப் படுத்த, புதுவையின் தொழில் மற்றும் நலவழித் துறை அமைச்சர் மாண்புமிகு எம். சந்திரகாசு அவர்கள் பங்கேற்று ஆராக்கியமான குழந்தைகட்கு பரிசுகள் வழங்க, மேலும் சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ.எம். கிருஷ்ணமூர்த்தி, தலைமைச் செயலர் சி.எஸ். கெயிர்வால், வளர்ச்சி ஆணையர்/மகளிர்-குழந்தைகள் மேம்பாட்டுச் செயலர் திரு பி.வி. செல்வராஜ் ஆகியோரும் பங்கேற்க விழா இனிதே நடைபெற்றது.

கலை, பண்பாட்டுத் துறை

                    புதுச்சேரியில், உலக மகளிர் நாளான மார்ச்சு எட்டாம் நாள் (செவ்வாய்க் கிழமை) கலை, பண்பாட்டுத்துறை சார்பாக, புதுவை நகர மன்ற விழா மண்டபத்தில் (மேரி), உலக மகளிர் நாளானது ஔவையார் பயிலரங்கமாக கொண்டாடப்பட்டது. அவ்வமயம் கலை, பண்பாட்டுத்துறை இயக்குநர், செல்வியர் பி. சுமதி அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினைத் துவக்கி வைக்க, புதுவைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்புல முதன்மையர் முனைவர் திரு அறிவுநம்பி அவர்களும், தமிழ்மாமணி புலவர் திரு சீனு இராமச்சந்திரன் அவர்களும் சிறப்புரையாற்ற, பேரா. தருமு - மைதிலி மற்றும் குழுவினரும், திரு உமர் எழிலன் மற்றும் குழுவினரும் அவ்வையார் பாடல்களுக்கு சிறப்புற இசையமைத்து இன்னிசை விருந்தளிக்க, முனைவர் திருமதி நாக. செங்கமலத் தாயார் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க விழா இனிதே நடைபெற்றாது. குழுப் பொறுப்பாளர்கள்: பேராசிரியர்கள் முனைவர் அசோக் குமரன், முனைவர் இளமதி சானகி ராமன், முனைவர் சிவ.மாதவன், முனைவர் பட்டம்மாள், முனைவர் எ.மு. இராஜன் ஆகியோர். பங்கேற்றோர் கலைமாமணி வேலவதாசன், திருமதி விசயலட்சுமி, திரு பி. அப்பலசுவாமி, உதவி நூலகத் தகவர் அலுவலர் திருமதி வே. கனி, கண்காணிப்பாளர், ஆகியோர்.


உலக மகளிர் நாளுக்காக, பெண் பாவலர்கள் இயற்றிய பாடல்களை வெளியிடுவதில் பெருமிதமடைகிறோம்

- இவண்
புதுச்சேரி - மின்னிதழ்

உலக மகளிர் நாளில் ஆளுநர் மற்றும் முதல்வரின் செய்திகள்:


மேதகு துணைநிலை ஆளுநர் திரு எம். எம். லகேரா அவர்கள்:

இந்நாளின் முக்கியத்துவம் என்ன? ஒரே ஒருநாள் மகளிர் பிரச்சனைகளை கேட்டுவிட்டு போவது முக்கியமல்ல. இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடந்தது, தற்போது நடப்பது, இனி வரும் காலங்களில் நடக்க வேண்டியவைகளைக் கருத்தில் கொண்டு, மகளிர்/குழந்தைகளின் அன்றாட வாழ்விலேற்படும் துன்பங்களைக் களைய, இனி அத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க ஆவன செய்யப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி பெண் குழந்தைகளுக்கு கல்வி. பெண்கள் கல்வியெனும் தன்னிறைவு பெற்றால் வீடும், அவள் குழந்தைகளும், சமுதாயமும் முன்னேறும்.

மாண்புமிகு புதுவை முதல்வர் திரு ந. அரங்கசாமி அவர்கள்:

இக்கால கட்டத்தில் பெண்களுக்கு சம உரிமையென்பது முழுமையாக கிடைக்கவில்லை எனினும், புதுவையின் அனைத்து மகளிர் தன்னார்வ அமைப்புகளும், புதுவையின் துறைகளும், பெண்கள்/குழந்தைகளின் மேம்பாட்டிற்காக அனைத்தையும் செய்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பொருளாதார வகையில் பெண்கள் முன்னேறினால் தான் அவர்களுடைய மக்கள்/குடும்பம/வீடு மட்டுமல்ல, ஊர், நாடு எல்லாமே உயர முடியும். பெண்களின் பெயரில் சொத்து பதிவு செய்யும் போதில் முத்திரைத்தாள் விலையில் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படுகிறது. கூடிய விரைவில் அங்கன்வாடியில் பணிபுரியும் பணி நிரந்தரமில்லாத பெண்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.பொறுப்பாசிரியர் - புதுச்சேரி மின்னிதழ்
புதுச்சேரி