புதுச்சேரி ஒரு முன்னுரை

           புதுச்சேரி நகரமென்பது, தென்னிந்தியாவில், தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரில் இருந்து 170 கல் தொலைவில், வங்கக் கடலோரத்தில் அமைந்த அழகான, அமைதிப் பூங்காவான இடம். அத்துடன் இது புதுவை மாநிலத்தின் தலைநகரும் கூட. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரஞ்சு கலாச்சாரம் சற்றே மேலோங்கி, இன்றும் மிஸே(Mister), ஒபித்தால்(Hospital), பொசியம்(Potion), கம்ராது(Comrade), தெம்மாந்து(demand) போன்ற பிரஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் அருகாமையிலுள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையிலுள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் அருகிலுள்ள மாஹே நகரும் இந்த மாநிலத்தின் அங்கமாகையால், ஆங்கிலம், பிரஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாள மொழி பேசும் மக்களும் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். மேலும் மேற்கு வங்க மாநிலத்தின் அருகிலுள்ள சந்திரநாகூர் என்னும் பகுதியும் புதுவையின் அங்கமாக முன்பிருந்தது. அதன் தாக்கத்தினாலே அரவிந்தர் முதலான அறிஞர்கள் புதுவையை இருப்பிடமாகக் கொண்டனர். இன்றும் கூட வங்க மொழி பேசும் மக்கள், அரவிந்தர் ஆசிரம வளாகத்தில் அதிகம்.

          புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி என்பது மகாகவி பாரதி, புதுவைக்கு வருவதற்குமுன்பிருந்தே துவங்கிய ஒன்று. அந்த வழியில், மகாகவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர், முதலான அறிஞர் பெருமக்கள் இலக்கியத் தொண்டினை பின்பற்றி, புதுவையின் கவிஞர் பெருமக்கள், பண்ணார் தமிழன்னைக்கு முத்தாரம் சூட்டி, உலக அரங்கில் முன்னிறுத்த பெரும் பாடுபட்டனர் என்று சொன்னால் அது மிகையல்ல. இன்றைய இளைய சமுதாயம் தமிழை நன்கறிய வேண்டும்; செம்மொழியாம் செந்தமிழில் தீஞ்சுவைப் பாக்களியற்ற வேண்டும்; இன்றைய சமுதாயம் மேன்மையடைய பங்களிக்க வேண்டும் என்ற பேராவலின் பலனாக உருவானதே இவ்விணைய தளம். கீழ்வரும் இணைப்புத் தொடர்களைச் சொடுக்கினால், புதுச்சேரியின் பன்முகங்களை அறிந்து கொள்ளலாம். இவ்விணைய தளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.

இவண்
அன்பன் செ. இராமலிங்கன்
அன்பன் இராச.தியாகராசன்.