மகளிர் எழுச்சி!

தனிப் பாடல்


எண்ணொன்று அதனுடனே எழுத்தொன்றும் சேர
இரண்டாகும் கண்ணென்று எடுத்தியம்பும் குறளும்
பண்ணோடு இசைகூடப் பாடலுந்தா னினிக்கும்
பாரினிலே ஆண்பெண்ணைப் பகுக்காமல் சமனாய்
எண்ணுகின்ற செயல்தனிலே ஏற்றமிகு காண
ஏனிந்தப் பிரிவினையோ! யாவர்க்குங் காட்சி,
கண்ணிரண்டா லுண்டாகும்; கருத்திதையே என்றும்
காலத்தா லழியாது காப்பதுவே மாட்சி!

குறைவான பொருட்களுமே கொண்டுவிடும் மதிப்பை
கூடுதலா யில்லாத குறைவுற்ற தாலே
நிறையாகப் பெண்குலமும் நீணிலத்தி லுற்ற
நிறைவான மதிப்பிற்கு நெஞ்சுநிறை நன்றி!
பிறைவளரும் நிலவுமுதல் பெருங்கடலும் நிலமும்
பெண்ணாகப் பாவித்துப் பெருமதிப்பை யூட்டி
கறையாக அவர்வாழ்வைக் காட்டுகின்றச் செயலால்
களங்கத்தை துடைப்பதையே கடமையாய்க் கொண்டார்

நாண்போன்று வளைந்தநிலை நாட்டினிலே போக்க
நற்கல்வி பயின்றதனால் நன்னிலையே பெற்றார்!
வேண்டுகின்ற பாதையில் மேன்மேலுஞ் சிறக்க
விடியலையே தேடியவள் வேரூன்ற லானார்!
மீண்டுமொரு அடிமையில் வீழ்ந்திடாமல் நன்றாய்
மேனிலையில் உயர்வடைய விழிப்புணர்வும் பெற்றார்!
தாண்டிவந்து இடர்ப்பட்ட தடைகளையே வென்று
தனிச்சிறப்பால் உலகினிலே தலைநிமிர்ந்து நின்றார்!



புலவர் பூங்கொடி பராங்குசம்,
புதுச்சேரி