உலக மகளிர் நாள் பாடல்

வட்டத்தை விட்டு வெளியே வா பெண்ணே!


அடக்குமுறை கண்ட பெண்ணினமே!
உன்னை யடக்கித் திரிபவர் ஆணினமோ!
பேதைப் பெண்களே சிந்திப்பீர்;
உம்மைக் கோடு போட்டு
நிற்கச் சொல்வது உம்குலமே!
சீதனக் கொடுமையில் சீறிடும் அடுப்பில்
சிதைந்து போகுமுங்கள் சீரிய உடல்
பணிந்து பணிந்து தொலைந்ததோ!
உங்கள் பண்பான மாண்பும்
பண்பாடும், குடும்பம் சூழலென்று
அடக்கப் பட்ட போதில்
அழிந்ததுவோ உங்கள் அருமை வாழ்வு!

இலெனின் வழித்தோன்ற லாயொரு
"இரேசா லக்சம்பேக்" குரலெழுப்பிக்
காட்டிட உலகும் தலை திருப்பிட
சீன தேசமும் அமெரிக்க மகளிரும்
அடித்தடித்து குரலெழுப்பிக் காட்டி
அய்.நா அடியெடுத்துக் கொடுக்க
உருவான திந்த உலக மகளிராண்டு..
ஆனாலும் உனக்கென்ன தந்தது;
இன்னும் அடிமை வாழ்வுதானே!

முழுநேரத் தொழில்புரியு முனக்கு
அடுக்களையில் காத்திருந்தது
மறுமுழுநேரத் தொழில்
குழந்தை வளர்ப்பு, கல்வி புகட்டல்
இன்னு மெத்தனையோ ஆணுக்கல்ல
எல்லாமே உனக்கென்றது ஆணினம்
கணவனின் காமக்காரிகையாய்
தன்னிலை மறக்க மரிக்கும்
உனக்கேது விடுதலை!
பண்பாட்டுக் கட்டுப்பாடுகளால்
மறுக்கப்பட்ட உன் பெண்ணினத்துத்
தேவைகளைத் தேடிப்பார்!

உன்னை மிதிப்பதால் எவர்க்கு இலாபம்;
உன்வாழ்வின் உச்சியைநீ எப்போது அடைவாய்;
உன்மேன்மை யாரால் அங்கீகாரம் பெறும்;
ஆதிக்கத்தின் கீழே நீங்கள் அடைவது தோல்வியே!
வானம் நடக்காது; பூமி பிரளாது;
சூரியனொரு துகளாய் உன்கண்ணில் தெரியும்
அங்கே ஒளி பிறக்கட்டும்
பிறரின் அன்பால் நீ பாலமிட முடியாது
பள்ளத்திலிருந்து நீமேலேறி கீழே பார்
உனக்குக்கீழே உனைத்தாழ்த்தி யவர்கள் தெரிவார்கள்
உன்னைச் சுற்றிக் கிடக்கும் வட்டத்தை விட்டு வெளியே
வந்து வானத்தைப் பார்
சுதந்திரப்பறவைகள் உனக்கும் பாடம் சொல்லும்!



பாவலர் புசுப்பா கிறிசுடி
கனடா