மலருக்குத் தென்றல் பகையானால்



மலருக்குக் கூட பகையுண்டா, இல்லை
பகைத்துக் கொள்ள தென்றலுக்கென்ன திமிரா?

மலர் மங்கை, தென்றல் துணை;

(மலருக்கு)

நிலவிற்குக் கூட கொடுத்து வைக்கவில்லை
தென்றலுடன் விளையாட
ஏன், நட்சத்திரங்கள் மட்டும்
கொடுத்து வைத்தனவா என்ன?
ஞாயிறு கூட விதிவிலக்கில்லையே!
பிரபஞ்சத்தில் வேறு எவைதானுண்டு;
மலரைப் பார்க்க, மணக்க, இரசிக்க,
தழுவ, தொட்டு விளையாட!
மலரின் மனதைத் தழுவி
தன்னொடு எடுத்துச் செல்லும்
பாக்கியம் தென்றலுக்கு மட்டுந்தானே!

அண்டவெளிப் படைப்பில் எதற்குங் கிடைக்காத
வாய்ப்பை விட்டுவிட்டு
பகைகூட கொள்வாயோ தென்றலே?

போயேன்;
பகைத்துக் கொண்டுதான் போயேன்!

பூவொன்று புயலாகும் போது
தென்றலென்ன
தென்படும் அனைத்துமே பகையானாலுங் கூட
புயலாகிவிட்ட பூவிற்கு எல்லாமே தூசுதான்!



கவிதாயினி இள. சாலினி,
புதுச்சேரி