புதுவைக் கவிதை - புதுமைக் கவிதை
அவை வணக்கம்
(இன்னிசை வெண்பா)
மாமணியாம் கல்லாடன் முன்னிலையில் செந்தமிழ்ப்
பாமணிகள் நாமணக்கப் பாடுங் கவியரங்கில்
தாமதமாய் வந்தாலுந் தத்துநடைச் சின்னவனைச்
சேமமுறக் காத்திடுவீர் சேர்த்து.
நாற்றெனவே சொல்லை நடவுசெய் பாவலன்நான்
ஊற்றெனவே கோவை வரிபாட சேரு(ம்)உம்
தூற்றுதல்என் உள்ளத்தே தோன்றிட்டக் கற்பனைக்கும்
ஏற்றுதல்நம் செம்மொழிக்கும் இன்று.
இருப்பவர் உரையினை போற்றுதும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
மங்கைச் சிட்டென மலரும் மொட்டென
தங்கத் தட்டென தவழும் பட்டென
எட்டி யோடு மெழுத்தைச் சேர்த்துக்
கட்டி யிழுக்குங் கனவலைக் கவிஞன்
புதுக்கவிப் பாடும் புலவரில் இளையோன்
புதுவைக் கவிஞரில் புதியவன் வந்தேன்
சிரந்தாழ் வணக்கம் சேர்த்தே னவைமுன்
விருந்தெனச் சேர்ப்பீர் வாழ்த்துட னென்னை
மின்னும் பாக்கள் மலரும் மாகடல்
பின்னும் பாவலர் பாடிடும் பாக்கடல்
சித்தக் கடலிலே சிக்கிடும் சிப்பிகள்
எத்தனைச் சிப்பியில் இருந்திடும் முத்து?
அறம்விளைத் தமிழ்க்கரை அளையுமென் தமிழ்மனக்
கரங்களில் கிடைப்பதோ கிளிஞ்சலும் சோழியும்!
ஆழியாம் தமிழின் அலையிற் சிக்கிடும்
சோழியும் சங்கதும் சிறப்பாம்; சேருமக்
கவிதைச் சொல்லின் கிளிஞ்சலு மழகாம்
கவிஞரில் எவர்க்கோ கிடைத்திடும் புதையல்
மொழிக்குக் கவிதை பழமைதா னாயினும்
உழலுமென் நினைவிலே வெறுமை; உண்மை!
கற்பனைக் கவிவளம் கவிஞனின் சொத்து;
விற்பனைக் கல்லவ் விளையும் முத்து!
ஆழ்கடல் முத்தினை யறிஞரும் தேடியே
மொழிக்கடல் மூழ்கி முனையும் போதிலே
சூழ்மலை முகிலெழி லழகினைச் சொல்கையில்
வாழ்வினில் காணுமிவ் வன்முறை சாடுவீர்!
கவின்மிகு கனவுலாக் காதலைச் சொல்கையில்
புவியினை யழித்திடும் போதையைச் சாடுவீர்!
மன்னுயிர் காத்திடும் மழைவளஞ் சொல்கையில்
இன்றையப் பெண்சிசு இனக்கொலைச் சாடுவீர்!
பாட்டி லுறைந்திடு பண்ணிசைச் சொல்கையில்
நாட்டின் மதம்வெறி நாசமுஞ் சாடுவீர்!
நாணுமத் தமிழ்மொழி நங்கையைச் சொல்கையில்
காணுமிச் சமூகக் குற்றமுஞ் சாடுவீர்!
கண்நிகர் முன்னோர் நன்னெறி சொல்கையில்
பண்பறு மாந்தரின் புன்னெறி சாடுவீர்!
பல்சுவை யுணவோ பூந்துகி லுடையோ
நல்லெழில் மனையோ நிறைவு தருமோ?
இருக்கையில் கவிதைகள் இன்றே அவைதனில்
பெரும் பெருமையே பாவலர்க் கனவாம்!
இறந்தநற் கவிஞரின் எழுத்தினை என்றும்
நிறைவுடன் போற்றும் நிலையினை இன்று
முறையுடன் மாற்றிநாம் முனைந்தே இருப்பவர்
உரையதும் ஏத்திடும் உயர்வினைச் செய்வமே!
அச்செடுக்க
கவிஞர் இராஜ. தியாகராஜன்
புதுசேரி
|