கவிதை வானில் - 2ம் கவியரங்கக் கவிதை


மழலைப் பருவம்

(இன்னிசை வெண்பா)

அஞ்சுதலோ மிஞ்சுதலோ ஏதுமற்ற இன்மழலைக்
கொஞ்சுமொழிக் காலம்; கவலை கனியாத
பிஞ்சுமலர் பொக்கையிதழ் வாய்ச்சிரிப்பால் நெஞ்சினிலே
வஞ்சமிலா இன்னமிழ் தூறும்.


வரும் முதுமை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அன்னைச் செதுக்கிய அழகுச் சிலை
கண்ணைக் கவர்ந்திடும் கனவுப் பெட்டகம்
தென்றல் காற்றில் தவழும் நீரலை
கன்னற் சுவையாம் கனிமொழிச் சாறு
கொடியிற் சிரித்திடும் தொடுக்கா முல்லை
மடியில் முகிழ்ந்திடும் மலராச் செண்டு
வண்ணப் பொக்கை வாயிதழ் சிரிப்பிலே
எண்ணக் கவலை யெரித்திடும் மருந்து
உழலும் மானிடர் வாழ்வி லுறைந்திடும்
நஞ்சும் துக்கமும் நிறைந்திடு மச்சமும்
கொஞ்சமு மில்லா குவளை நறுமலர்
மழலைப் பருவமாம் முத்துப் புதையல்
கழறும் விந்தைக் கிளிமொழிப் பேச்சு
பிஞ்சுக் கனிவிரல் பேசும் கருவிழி!
நெஞ்சச் சோலையின் நினைவுக் குயிலிசை
நடந்திடு மிளமையே நிழற்படக் காட்சி
கடந்திடு மின்னாள் கானல் நீரென
கடுகிப் போன கனவிற் றவழவே
முடிவை நாடும் மாந்தர்க் காமோ?
நேற்று யின்று நாளை யென்றிவ்
வாற்றுப் பாலம் ஒருவழிப் பாதையாம்!
மலையிற் பிறந்து மடுவிற் சேரும்
அலையும் நதியாய் இளமை யோடும்!
அழையா விருந்தாய் அந்தகன் பரிசாய்
நுழையும் வாழ்வில் நிச்சயம் முதுமை!
சூழும் ஏனையர் சுகமாய் வாழவே
வாழும் போதினில் வகையாய் வாழ்வமே!


கவிஞர் இராஜ. தியாகராஜன்
புதுசேரி