அன்புள்ள தமிழ் பெருமக்களே,
முதலில் இணையத் தமிழென்பது நடப்புத்
தமிழுக்கு எதிரல்ல. கணினியும், மின்னியலும், மின்மடலும், வலையுலாவிகளும், மின்தூதுவர்களும் கோலோச்சும் இக்கால கட்டத்தில் இணையத்தமிழ் இலக்கியம் உலகிலுள்ள தமிழ்கூறும் பல நல்லிதயங்களின் பேரார்வத்தால் தழைத்தோங்கி, பல்கிப் பெருகி மணம் வீசிக் கொண்டிருக்கிறது. நடுவண் அரசின் பல்வேறு முயற்சிகளால், ஒரு இலட்சமும் அரை இலட்சமும் விலையாயிருந்த தனிக் கணினிகள் (Personal Computers) இன்று இருபதாயிரத்துக்கும் குறைவான விலையில், நடுத்தர மக்களும் வாங்கிப் பயன்படுத்தும் வகையாய் இருக்கின்றன. புதுவை அரசு அனைத்து அரசுக் கல்வி நிறுவனங்களுக்கும் கணினி வழங்கியிருப்பதால், நான்கைந்து அகவையுள்ள சிறார்களும், சிறுமியருங்கூட கணினியை அழகாக பயன்படுத்துகின்றனர்.
தமிழுக்கோர் இணைய இலக்கிய இதழொன்று புதுவையினின்று வெளிவந்தால், புதுவைக்கும், தமிழ் பேசும் நல்லிதயங்களுக்கும், இணைய இலக்கியத்திற்கும் நாளைய இளையர் சமுதாயத்திற்கும் பெரும் பயனளிக்கும் என்றெண்ணினேன். எனது இந்த நினைவுகளுக்கு உரமாகவும், முன்னோடியாகவும் திகழ்கின்றவர்; மரத்தடி தளத்தினை உருவாக்கி தமிழ் இலக்கியத்திற்கு பெருந்தொண்டாற்றி வரும் மதி என்று இணையத்தில் அனைவராலும் சாதாரணமாக அறியப்படும் திருமதி சந்திரமதி கந்தசாமி என்கிற அசாதாரணமான பெண்மணி. மேலும் இத்தனை படைப்புகளா என்று கண்கள் விரியுமளவுக்கு இணைய இலக்கியத்திற்கு தொண்ட்டாற்றி வரும், ஹரியண்ணா என்று பலராலும் அன்பாக அழைக்கப்படும் திரு ஹரிகிருஷ்ணனின் படைப்புகளும், இணையத்திலேயே விருத்தங்களை சொல்லித்தரும் திரு இலந்தை இராமசாமி அவர்களின் பெருமுயற்சியும், அயல்நாட்டிலிருந்தாலும் தமிழில் ஆழ்ந்த புலமையுடன் மரபிலக்கியத்தை போற்ற வழிவகைகள் செய்கின்ற திரு எஸ். பசுபதியவர்களின் பாங்கும், என்னை பல இரவுகள் தூக்கமின்றி வைத்து, தமிழுக்கு வேறெதனையும் எதிர்பாராமல் ஏதாவது செய்யவேண்டுமென்ற மனவுறுதியளித்தன!
இந்த வகை இலக்கியத்தில் மரத்திலிருந்து வரும் வெற்றுத் தாள்களுக்கு இடமில்லை என்பதால், எப்படி மின்மடல்கள் சுற்றுச்சூழலுக்கு பேருதவியாக இருக்கின்றனவோ, அதுபோலவே இந்த வகை இணையத்தமிழ் இலக்கியமும், அதில் ஈடுபடும் தமிழ் நெஞ்சங்களும் சுற்றுசூழலை காக்க தன்னறியாமல் உதவுகின்றனர்! இத்தளத்தின் பொறுப்பாசிரியராயிருந்து தமிழ்ப் படைப்புகளை ஒழுங்கு படுத்தித் தரவேண்டுமென்று கேட்டுக் கொண்டதும், தனக்கிருக்கும் பலவித அலுவல்களுக்கிடையில் மிக்க ஆர்வத்தோடு ஒப்புக் கொண்ட புலவர் திரு செ. இராமலிங்கனாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
இராச. தியாகராசன்.
அழகுத் தமிழிருக்க வேற்றுச்சொல் எதற்கு?
| பிறமொழிச்சொல் | தமிழ்ச்சொல் | பிறமொழிச்சொல் | தமிழ்ச்சொல் |
| அதிர்ஷ்டம் | நல்வினை | அபராதம் | தண்டம் |
| அபிப்ராயம் | கருத்து | ஆமோதித்தல் | வழிமொழிதல் |
| அபிஷேகம் | திருமுழுக்காட்டு | அனுஷ்டி | கடைபிடி |
| அர்த்தம் | பொருள் | ஆரம்பம் | துவக்கம் |
| அபூர்வம் | அருமை | ஆனந்தம் | இன்பம் |
| அவசியம் | தேவை | இலக்கம் | எண் |
| அதிதி | விருந்தினர் | இலாபம் | மிகுவருவாய் |
| அனுபவம் | பட்டறிவு | இராஜிநாமா | பணிவிலகல் |
| அனுதாபம் | ஆறுதல் | இராகம் | பண் |
| அர்ச்சனை | போற்றி | உத்தேசம் | மதிப்பு |
| அர்ப்பணம் | ஈகை | ப்ரஜை | குடி |
| அங்கத்துவம் | உறுப்புரிமை | ப்ரஜாவுரிமை | குடியுரிமை |
| அங்கீகாரம் | ஒப்புதல் | சமாதானம் | அமைதி |
| அமுல்படுத்துதல் | செயலாக்கம் | நீதிமான் | நீதியரசர் |
| அஞ்சலி | அகவணக்கம் | விஞ்ஞானம் | அறிவியல் |
| அதிகாரி | அலுவலர் | விஞ்ஞானி | அறிவியலார் |
| ஆச்சர்யம் | வியப்பு | சர்வதேச | பன்னாட்டு |
| ஆட்சேபணை | எதிர்ப்பு | மந்திரிசபை | அமைச்சரவை |
| ஆரோக்யம் | உடல்நலம் | பாராளுமன்றம் | நாடாளுமன்றம் |
| அபிவிருத்தி | மேம்பாடு | டேட்டா(Data) | தரவு |
| சரித்திரம் | வரலாறு | சந்தோஷம் | மகிழ்ச்சி |
| கரகோஷம் | கையொலி | கவர்னர் | ஆளுநர் |
| சுகாதாரம் | நல்வாழ்வு | பரிட்சை | தேர்வு |
| பிரச்சனை | சிக்கல் | யுத்தம் | போர் |
| ராணுவம் | படை | தத்துவம் | மெய்யியல் |
| உத்யோகம் | பணி | சகோதரன் | உடன்பிறந்தான் |
| சகோதரி | உடன்பிறந்தாள் | சக்தி | ஆற்றல் |
| சபதம் | சூளுரை | சங்கடம் | இக்கட்டு |
| சந்தேகம் | ஐயம் | சம்பந்தம் | தொடர்பு |
| சமீபம் | அண்மை | சுவாமிகள் | அடிகள் |
| நஷ்டம் | இழப்பு | நித்திரை | துயில் |
| சங்கீதம் | இசை | உத்தரவாதம் | உறுதி |
| உதாரணம் | எடுத்துக்காட்டு | சிருஷ்டி | படைப்பு |
| விஸ்த்தரிப்பு | விரிவாக்கம் | விநோதம் | விந்தை |
| கும்பாபிஷேகம் | குடமுழுக்கு | கோஷம் | முழக்கம் |
| ஈமக்கிரியை | இறுதிச்சடங்கு | சட்டரீதி | சட்டப்படி |
| நிபுணர் | வல்லுனர் | பாக்கி | நிலுவை |
| ப்ரகாசம் | ஒளி | விரதம் | நோன்பு |
| ஜாமீன் | பிணை | ஜாக்ரதை | விழிப்பு |
| தினம் | நாள் | மாதம் | திங்கள் |
| வருடம் | ஆண்டு | விமர்சனம் | திறனாய்வு |
| பிரதம | முதன்மை | பிரதி | ஒவ்வொரு |
| வர்த்தகம் | வணிகம் | மார்க்கெட் | அங்காடி |
| நீர்வீழ்ச்சி** | அருவி** | விசேஷம் | சிறப்பு |
| பேட்டி | நேர்க்காணல் | பத்திரிக்கை | ஏடு/தாள் |
| விஜயம் | வருகை | பொதுஜனம் | பொதுமக்கள் |
| வியாதி | நோய் | வருத்தம் | துன்பம் |
| நகல் | படி | முதற்ப்ரதி | முதற்படி |
| கெஜட் | அரசிதழ் | ஸ்திரத்தன்மை | உறுதிப்பாடு |
| ஊர்ஜிதம் | உறுதிப்படுத்தல் | வீதம் | விழுக்காடு |
| பிரச்சாரம் | பரப்புரை | காரியம் | செயல் |
| கோரமாட்டோம் | கேட்கமாட்டோம் | வரப்ரசாதம் | கொடை |
| காரியாலயம் | அலுவலகம் | ஆலயம் | கோயில் |
| கவுரவம் | பெருமை | விநியோகம் | வழங்கல் |
| பூஜ்யம் | சுழி | ஸ்ரீலஸ்ரீ | தவத்திரு |
| ஜென்மம் | பிறவி | வாதம் | சொற்போர் |
| தீவிரவாதம் | வன்முறை | வயது | அகவை |
| மிருகம் | விலங்கு | பாஷை | மொழி |
| வாயு | காற்று | ஆகாயம் | வானம் |
| டிடிஎச்@ | வீதேவா@ | சுனாமி | ஆழிப்பேரலை |
| செட்டாப் பாக்சு | மேலமைப் பெட்டி | மதிப்புக் கூட்டுவரி(வேட்) | மகூவ |
|
**நீர்வீழ்ச்சி என்பது சரியான பதமல்ல. அது ஆங்கில சொல்லான water-falls என்பதன் தமிழாக்கமே!
@வீடு தேடிவரும் வானொளி
அச்செடுக்க
|
|