கன்னல் சாறனையக் கன்னித் தமிழ்!


(கலிவெண்பா)

தந்தையவர் பீடுறவும் தாயவளே போற்றிடவும்
சிந்திப்பீர் மின்னியலின் சித்துத் தமிழர்களே!
வந்திட்டோம் வாழ்ந்திட்டோம் என்றநிலை மாறிடவே,
இன்னாளில் காண்கின்ற இக்கதையைச் சொல்கின்றேன்!

காய்ந்திருக்குந் தேனிலவு; காட்டில் பொழிந்திட
பாய்ந்திழியும் தண்ணருவி பண்ணிசைக்க; தன்மடியிற்
சாய்ந்திழையு மன்னத்தின் சேல்விழியில், பெண்ணவளின்
வேய்குழ லொக்கும் உயர்குரலில் சொக்கியவன்

அயல்நாட்டு மின்னிய லாக்கத்தை வாழ்வில்
பயின்றாலும் மென்பொருளைப் பைந்தமிழிற் செய்ய
கயல்விழி நங்கைக் கரமேந்தி யன்பு
மயில்விழி மங்கை மனங்குளிர சூளுரைத்தான்!

கன்னியவள் மெல்லியலும் கண்ணுக்கு ளாடுமவள்
சின்னவிழி யண்மைதன் சூளுடைக்க அவ்விளைஞன்
பொன்மகள் கைத்தலம் பெற்றிடவே தான்வேண்டி
நெஞ்சி லுறைந்திட்ட நேரிழையைத் தானுன்னி

எண்ண முகிழ்ந்திட்ட இன்பஞ்சே ராவலதை
நன்னுதல் ஆரணங்கின் நேர்முன்னே செப்பஅவள்
"என்னுடலு மாருயிரே, என்னுயிரும் உம்முடைமை"
என்றாலும் பாரில் இணையத்தின் பேர்விளங்க

மேன்மைத் தமிழுயர முன்னர்நீர் நெஞ்சகத்தில்
முன்னிய மென்பொருளை முற்றாய் முடித்திடுதீ
பின்னரே நான்உம் பனிமலர்க்கை பற்றிடுவேன்!
என்றியம்பக், கூர்வேலா யாழத்தில் தாந்துளைத்த

சிந்தை கவர்ந்திட்ட சிற்றிடையாள் சொல்லம்பு
வெந்தழற் கோலெனவே வீரத்தை தொட்டிடவே
செந்தமிழின் மேன்மைக்குச் சீர்மைத் தமிழ்க்கணினி
விந்தையென யாத்திட்டான் மின்தமிழ்க் காளையவன்!

முன்னாளில் முன்னோரும் முற்றுணர்ந்த பின்னோரும்
தந்ததவும் கன்னித் தமிழுக்காய் இங்கிருக்க
இன்றிவ் விளையர் இசைவாக ஏற்பதுதான்
என்றுந் தமிழுக்கே நன்று!



பாவலர் இராச. தியாகராசன்
புதுச்சேரி