ஆழிக்கொரு விண்ணப்பம்!

ஆழியே கேள்!


நிலை மண்டில ஆசிரியப்பா

வங்கக் கடற்கரை வாழ்ந்த எம்மின;
மங்காப் புகழ்சேர் மறவத் தமிழினச்
சங்காய் முழக்கிய தமிழர் மாநகர்!
எங்கு மோடிய நாவாய் நிறைந்து,
அலைகட லோரம் அழகின் உருவென
கலையெழில் புதுக்கிய காவிரிப் பட்டினம்!
எத்தனை முறைதான் எழுந்தே பொங்கி,
முத்தாம் தமிழின் மேன்மை நூல்களுன்,
பானை வயிறு புடைக்க எடுத்து,
ஆனைப் பசிக்கு அள்ளித் தின்றாய்?

முன்னம் முடியா இலக்கியந் தேடியா,
மன்பதை வாழ்விலுங் குளிர்ந்த சாவிலும்,
விரிகடல் நோக்கி விழியினைப் பதிக்கும்,
பரதவ மக்களும் புதைந்து போகவே,
சுடர்விழித் மழலைகள் சிதைந்து போகவே,
விடியலில் மீண்டும் வெகுண்டு எழுந்தாய்?
தாழாத் தமிழின் மேன்மை மறந்த,
சூழும் இருளாய் சிந்தனை நிறைந்த,
கட்டது அறுந்த கட்டு மரமென,
கெட்டே அழியும் குணமில் தமிழர்

வாழக் கண்டோ வெகுண்டு எழுந்தாய்?
கோழைக் கடலே தவறே செய்தாய்;
நெடித்தே எழுந்துன் நெடுந் திரையாலே
கடிதில் கொன்றது குற்ற மற்ற
பிஞ்சுகள்; பெண்டிர்; உன்றன் மக்கள்!
கெஞ்சி உனையே வேண்டு கின்றேன்!
தெண்டிரை சூழ்ந்த என்ன கத்தையே;
வண்டமிழ் வாழும் தென்ன கத்தையே;
என்றுமே தொடாதே! என்றுமே தொடாதே!



பாவலர் இராச. தியாகராசன்
புதுச்சேரி