விடையறியா வினாக்கள்
இருபத்து மூன்றாவது முழுநிலவுப் பாவரங்கில் பாடியது
இன்னிசை வெண்பா நிலைமண்டில ஆசிரியப்பா
தமிழ் வணக்கம்
கண்ணின் விழியெனக் கன்னற் சுவையென
மண்ணின் மணியென மேன்மை வழியினில்
என்னை வளர்க்கும் இனிமைத் தமிழதை
என்றுங் காப்பேன் எழுந்து!
அவை வணக்கம்
காதலும் காவியமும் காத்திருக்கும் பாக்கடலில்
வேதாந்தத் தலைப்பில் விடைதேடக் கேட்டீரே!
போதாத வேளை பிறந்ததே என்றெண்ணி
ஏதோ எழுதிட்டேன் இன்று!
நித்தமும் நெஞ்சகத்தில் நீந்தும் அலைக்குமிழாய்
எத்தனையோ கேள்வி; எகத்தாளத் தத்துவமாய்,
தத்துமனப் பித்தெனவே தாவுகின்ற சிந்தனையின்
சித்துமன வோட்டச் சிரிப்பு!
பாவென்னும் ஆணிமுத்தைப் பாடுந் தமிழினக்
காவலரா யான்றோர்கள் கண்முன்னே வீற்றிருக்க
நாவலனாய் நினைத்திங்கு நானெழுதும் சொல்லழகுப்
பூவினையே ஏற்பீர் பொறுத்து!
விடையறியா வினாக்கள்
எதுகையும் மோனையும் யாப்பும் அணியும்
உதித்தே எழுந்து பற்பல வகையில்
வெல்லச் சொற்கள் வெடித்தே சிதறி
சொல்லத் துடிக்கும் சிந்தனை என்னில்!
தூய்மை நேசம் தாய்மை யன்பு
வாய்மை யழகு வளமை கொஞ்சும்
கிராமிய வாசம் கவடுக ளில்லா
தரமாய் வாழ்க்கை தன்னை விடுத்தே
பொய்மை யழகு புதுக்கும் ஊற்றாம்
இயந்திர நகரில் செல்வந் தேடி
முயன்று பலப்பல வழியி லோடி
மயக்கும் வலையாம் மதுவை நாடி
சூழுங் கவலைக் கரையான் அரிக்க
வாழ்வைத் தொலைக்க நகர போதையா?
ஊரின் நடுவே உயிரென நிற்கும்
வாரிதி யொத்த ஊரணி யெங்கே?
காற்றின் மாசினை யுறிஞ்சிக் காக்கும்
மரங்க ளெங்கே? மனிதமும் எங்கே?
அண்டை அயலார் வீட்டில் நிகழும்
சண்டைச் சேர்க்கை சகல நடப்பின்
விசனந் தன்னை வலிந்தே வந்து
உசாவி யறியும் கரிசன மெங்கே?
குடும்பங் கூடி கூட்டாம் உண்ணும்
கடமை யதுவே காற்றில் பறக்க
காட்சிப் பெட்டி கட்டி அழுதிடும்
நாடகப் பேத்தல் நசுங்கிய வாழ்வில்
காரது வழங்கும் கொடையே பொய்க்க
நீருக் கலையும் நிலைமை அறுமோ?
வண்டிப் புகையை புழுதிப் பெருக்கை
கண்டும் காணா மக்கள் வாழ்க்கை
இகமதி லின்று மனிதர் தேடும்
நகர நரக போதை விடுத்து
உண்மை யன்பு உறவி னண்மை
கனிந்தே துடித்து கடுகி யுதவும்
மனித நேயம் மீண்டும் தோன்ற
சுனாமி அலையென இழப்பா வேண்டும்?
அடுப்பை ஏற்ற நெருப்புப் பெட்டியை
எடுக்கும் போதிலே எனது கண்களில்
படுவ தென்னவோ பசித்த பாலரின்
படிக்க இயலா பசுமை விரல்களே!
கட்டா யமென கல்வி யதனை
சட்டமாய் சிட்டுகள் கற்ப தென்றோ?
விடையே யறியா வேதனை வினாக்கள்;
தடையென நிறைந்த தரணியி லின்று
களைகள் அகற்றி மேனிலை காண
இளையர் எழுவீர் சூளுரை பூண்டே!
பாவலர் இராச. தியாகராசன்
புதுச்சேரி
|