மலரினும் மெல்லியது காதலே.....
கவிதை வானில் நான்காவதுப் பாவரங்கில் பாடியது
இன்னிசை வெண்பா நிலைமண்டில ஆசிரியப்பா
கொஞ்சிப் பேசும் கிளியே நல்லின்பம் தரும் ஜோதியே
மானே மலரினும் மெல்லியது காதலே - மகிழ்வோம் நாமே
புதுமை வாழ்விலே - பட்டுக்கோட்டையார் (பிப்ரவரி 14 - காதலர் தினம்)
தமிழ் வணக்கம்
தொல்காப் பியமும் சிலப்பதி காரமும்
ஒல்காப் புகழொடு வள்ளுவஞ் சொல்லிடும்
தெள்ளிய நந்தமிழ்த் தூய்மை உரைப்பமே
வெல்லுந் தமிழை உணர்ந்து.
அவை வணக்கம்
இன்றிளையர் போற்றிடுங் காதல் தினமிது
அன்றனைவர் போற்றிய காமனின் பண்டிகை!
நானுணர்ந்து நும்முன்னர் காதலின் மேன்மையை
இன்றுரைக்க வந்தேன் எழுந்து.
மலரினும் மெல்லியது காதலே!
வழக்கென உரோமர் ஏற்றது தானே;
பழமைத் தமிழர் பருவத் திருவிழா!
சங்க காலக் காமன் பெருவிழா!
இங்கே இளையரின் காதலர் தினமோ?
எட்டுத் திக்கும் மொழியது கடக்க,
பட்டுக் கோட்டை படித்த வரிகள்;
மலரை விடவும் மெல்லிய விந்தை
உலகம் எங்கும் விழையும் காதல்!
கயலின் விழிகள் கவிதை பேசும்;
குயிலின் மொழிகள் கரைந்து போகும்!
தினமும் முடியக் கனவு காணும்;
மனமும் கரைய மயங்கி யோடும்!
இளமை கால இனிமைக் கவிதை;
தளையு மறியா தனிமைக் கனவு!
எண்ணம் இனிக்கும் இன்ப உறவு;
கண்ணும் துடிக்கும் காதற் கனவு!
பள்ளிச் செல்லும் பருவ வயதில்,
உள்ள மறியும் வசந்த காலம்!
மெல்ல மாறி மலரும் எண்ணம்;
துள்ளி யாடும் வயதில் தோன்றும்!
கள்ளத் தனமாய் காணுங் கலையை
சொல்லித் தருவ துண்டோ யாரும்?
மலையில் பிறந்த மலரின் குவையாய்
அலையில் அரும்பும் அமுதக் கலையாய்
முகிலில் மறைந்த முழுமை மதியாய்
துகிலும் மறைத்த தேனின் கனியாய்
வானம் வரைந்தக் குளிர்ந்த நிலவாய்
தோன்று கின்ற உள்ளத் தலைவி
கொஞ்சுங் கிளியாய் நெஞ்சி லுலவி;
பஞ்சின் மென்மை படுக்கை மீதில்
சில்லறை சிந்தும் சிரிப்பின் எழிலாய்
கிள்ளை யொத்த மொழிப் பேச்சில்
வளரா இளமைக் கொடியும் வளரும்;
மலரா மென்மை முகையும் மலரும்!
அன்று முதலாய் இன்று வரையில்
வந்து மலரும் உணர்வாய் நினைவில்
நின்றே உயிரும் கண்டு கரைய
ஒன்றி யுடலும் கலக்கும் காதலே!
பாவலர் இராச. தியாகராசன்
புதுச்சேரி
|