நிலவுக்கும் கதிர்கள் உண்டு

இருபத்தைந்தாவது முழுநிலாவரங்கில் பாடியது

எண்சீர் விருத்தம்
கட்டளைக் கலித்துறை


தமிழ் வணக்கம் (இன்னிசை வெண்பா)

பன்முகமாய் இவ்வவையில் பார்புகழும் பாக்களையே
கன்னற் றமிழ்மொழியில் காரெனவே யாக்கவரும்
மின்னி யொளிவீசும் விண்மீனாம் பாவலரை
நின்று வணங்குகிறேன் நான்.

அவை வணக்கம் (எண்சீர் விருத்தம்)

நனிசிறந்த நம்புதுவை கவிஞர் மக்கள்
.....மின்னிதழில் என்றுமெழில் ஒளியே வீச
இணையவிதழ் நடத்துகின்ற இராசன் நானும்
.....எழில்மரபில் தானெழுந்த மோகத் தாலே
அணியணியாய் அழகுநிறை அமுதச் சொல்லால்
.....அருந்தமிழ்ப்பா புனைகின்ற தமிழின் அன்பன்
மணிமகுடத் தலைமையிலே கவிதை பாட
.....மனந்துணிந்தேன்; கவிஞனென ஏற்பீர் சேர்த்தே!

நிலவுக்கும் கதிர்கள் உண்டு (கட்டளைக் கலித்துறை)

செந்தமிழ்ப் பாவலர்; தண்டமிழ்க் காவலர்ச் சிந்தனையில்
கன்னலா யோங்கும் நிலவாம் தமிழின் கதிரதுவே,
என்றுமே தண்மை எவர்க்கும் இனிமை அமைந்திடுநற்
பண்பு துலங்கும் எளிமை; நமக்கும் பெருமையதாய்!

புனையுங் கவியில் புதுக்கும் தமிழின் புதுமொழியில்
வனையுங் கலையில், வளமை மறந்தே யொருசிலரும்
வினையா யயல்மொழி போற்றித் தமிழை விரட்டிடவே
முனைந்தே உழைக்க முளைத்தார் அருமைத் தமிழகத்தில்!

காலமும் மென்மை; கவினுறு காட்சி எளிமையென
கோலம் புனைந்தே கணினித் தமிழரும் நின்றுவிட்டால்,
நாளைத் தமிழினி நாட்டிற் சிதைந்துத் தமிங்கிலமாய்
நீளலைப் பட்ட மணல்வீ டெனவே கரைந்துவிழும்!

துன்புற்ற செம்மொழி தெண்டிரைத் தாண்டி யொளிபரப்ப
அன்புற் றவைமுன் அழகுத் தமிழில் அழைத்திடுவேன்;
மின்னியல் கற்றத் தமிழினக் காளைகாள் முந்திடுவீர்;
ஒண்டொடி பூண்ட அறிவெழில் நங்காய் எழுந்திடுதீ!

எங்கு மெழுந்த இணைய வலையெனும் பின்னலிலே
செங்கதி ரன்னத் தமிழ்மொழிப் பல்கிப் பெருகிடவே
தங்கத் தமிழிலே பல்வகை மென்பொருள் யாத்திடுவீர்;
பொங்கு மெழிலாய் இணையத் தமிழை வளர்த்திடுவீர்!

எந்நாளும் எல்லொரும் வாழ யிடந்தரும் நம்மினமே!
வந்தார் மொழியு முயர உழைக்கின்ற வண்டமிழே!
கண்ணது விற்று கலையெழி லோவியம் வாங்குவதோ;
அன்னைத் தமிழினை விற்று அறிவினைப் பெற்றிடவோ!

புலமே பெயர்ந்த தமிழர் கலையாய் வலையகத்தில்
நிலமே நடுங்கப் படைக்கும் நிலையிலே நாமுமிங்கே
பிளவாய் விரிந்தச் சுவரென நிற்பதும் நேரதுவோ?
களத்தி லிறங்கிக் கலக்கவே வாரீர்! தருணமிதே!



பாவலர் இராச. தியாகராசன்
புதுச்சேரி