தமிழ் வணக்கம் (இன்னிசை வெண்பா)
வகையாய்ப் பலரும் வளமை யெனவே
மிகையாய் அயலார் மொழியினைப் பேசும்
இகழ்ச்சி யறவே நிதமும் நடக்கவே
வைகைத் தமிழிலே வாழ்த்து.
அவை வணக்கம் (இன்னிசை வெண்பா)
பொழியும் புதுநிலவுப் பாவரங்க மன்றில்
தழலென வீசியே தாரணியின் கேட்டை
எழிலாம் தமிழால் எரித்திடவே வந்த
வழுவிலாப் பாவலர்க்கு வாழ்த்து
காலமிதைத் தவறவிட்டால்... (கட்டளைக் கலித்துறை)
அந்நாள் தமிழின மேன்மை யுலகி லெடுத்துரைக்க
பண்ணார் மரபிலே போற்றுங் கவிபுனை பெண்கவிகள்
விண்ணி லொளிவீசு விண்மீனாய் மின்னிட வீற்றிருந்தார்
இந்நாள் கவியுலகி லெங்கே மகளிர்; எழுந்தவினா!
காலந் தவறிற்றோ வன்றி தவறிய கேள்வியிதோ;
ஞாலந் தவறிற்றோ; துள்ளிடும் கேள்விகள் நெஞ்சகத்தில்
கோல நிலவிலே பாயு மெழில்நதி யோரமதில்
நீளெழுந் திட்ட நெடுமரத் தின்கீழே நின்றவளை
உன்னிநான் உள்ள முகிழ்ந்த வினாக்கள் எடுத்துரைத்தேன்
கன்னியவள் கண்பார்த்து நேரு ரைத்த பதிலிதுவே!
பெண்மை விலைபேசும் வீண ரிருக்கும் வரையினிலே;
உண்மையாய் பெண்க ளுரிமை யடையா நிலையினிலே;
கட்டுக் கவியுஞ் செதுக்குஞ் சிலையும் எமக்கெதற்கு
எட்டி யடைய வழியோ நெடிதான தாகையினால்
தட்டுந் தருணமிதை ஏற்றி டாமல் தவறவிட்டால்
எட்டாமல் போய்விடுமே இன்றெம் வாழ்க்கை வழியதுவே!
பாவியம், காவியந் தேவைதான் என்றாலும்; பூநிலத்தில்
பாவை நிலைய துயரவே நாமின்று சூளுரைப்போம்
பாவை யுரைத்த தெனதுள்ளே வேலாய் இறங்கிடவே
பாவலர் முன்ன ரிதனைப் கவியாய் எழுதுவனே!
பாவலர் இராச. தியாகராசன்
புதுச்சேரி