எதையும் தாங்கும் இதயம் இருந்தால்...

கவிதை வானில் பாவரங்கில் பாடியது

நேரிசை வெண்பாக்கள்


தமிழ் வணக்கம்

திரைகட லோடியே தேந்தமிழ் மேன்மை
யுரைத்த தமிழர் உயர்ந்து - சிறந்திட
இந்நாள் இணைய இளையர் முனைவமே
கன்னற் றமிழால் கனிந்து

அவை வணக்கம்

சொல்லைச் சொடுக்கியே சீறுகின்ற பாக்களை
வில்லின் கணையாய் விடுத்திடுஞ் - சொல்லாய்வர்;
பூவைச்செங் குட்டுவன் பாவரங்கில் செந்தமிழால்
நாவினிக்கப் பாப்புனைவேன் நான்.


எதையும் தாங்கிடும் இதயம்

கனிச்சுவை பொங்கும் கனிச்சுவை விட்டுப்
பனிக்குளிர் வாளியாய்ப் பாழ்ச்சொற் புனைந்திடுங்
காரிருள் போர்த்த கருப்பா மிதயமே
ரமிலாக் கல்லதற் கொப்பு.

பார்த்திடும் போதிலே பாங்கினைச் சொல்லிடும்
பாரா திருக்கையில் பொய்யுரை - தூற்றிடும்
சீர்மை குணமிலாச் சிந்தனை நெஞ்சமே
ரமிலாக் கல்லதற் கொப்பு.

பொய்யா மொழியார் புகன்றது போலவே
செய்ந்நன்றி கொன்றிடுந் தீயோர்தம் - பொய்மைகள்
ஆர்த்திடுங் கோண லுரைக்கு மிதயமே
ரமிலாக் கல்லதற் கொப்பு.

தடவிப் படிக்குந் தமிழ்மொழி நூலின்
மடங்கிய தாளின் மடிப்பின் தடமுரை
வேர்சொல் வடமொழி என்பா ரிதயமே
ரமிலாக் கல்லதற் கொப்புபாவலர் இராச. தியாகராசன்
புதுச்சேரி