ஏனிந்த சோதனை?
இசைப் பாடல்
காற்றுமில்லை மழையுமில்லை
புயலுமில்லை அறிவிப்புமில்லை
கடல்நீர் பெருக்கின் சீற்றத்தால்
பொங்கி யெழுந்த திடீர் அலையால்
எண்ணி லடங்கா உயிர்பலிகள்;
எத்திசை நோக்கின் மரண வோலம்!
குழந்தைக் குட்டிகள் வாரிசுமில்லை,
குடியிருந்த குடிலும் காணவில்லை;
கூடிக் குலவிய குடும்பமில்லை
கூட்டமாய் வாழ்ந்த சுவடுமில்லை!
திசை யெங்கும் தாங்கொணாத் துயரம்;
திக்கற்று நிர்கதியாய் மக்கள் கூட்டம்!
அழுது புரண்டாலும் மாண்டவர் மீள்வரோ?
ஆறுதல் சொல்வதால் பயனுண்டோ?
எதையும் தாங்கும் இதயமுமில்லை;
என்ன தண்டனை யிது? ஏனிந்த பாதிப்பு?
யார் பொறுப்பார் இக்கோரப் பலியை,
யார் காப்பார்? ஏனிந்த சோதனை?
அடையாள மின்றி அலங்கோலமாய்
அடுக்கடுக்காய் அழுகிய பிணங்கள்;
அள்ளித் தெளித்த கோலங்களாய்,
ஆடி யடங்குமுன் மரண சாசனம்!
ஆண்டவ னொருவ னுலகி லுண்டென்றால்,
அழிவைத் தந்துயிரை கொண்டதுமேன்?
நிலையற்ற வாழ்வு வாழ்க்கைப் பாதை;
நிலை குலைந்த மக்கள்கூட்ட நடமாட்டம்!
கல்லுங் கசிந்து உருகு மோலங்கள்;
கல்மனமும் கரைந்திடுமே காட்சியதால்!
நெஞ்சம் நெகிழும் நீங்கா சம்பவமிது;
நீரூற்றாய் வழிந்தோடும் கண்ணீர் காணிக்கை!
பாவலர் ப. சுந்தர விநாயகம்
புதுச்சேரி
|